Home இலங்கை சமூகம் மன்னாரில் கன மழையால் 1000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

மன்னாரில் கன மழையால் 1000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

0

மன்னார் மாவட்டத்தில் நேற்று (24) காலை வரை பெய்து வந்த
கடும் மழையின் காரணமாக 1898 குடும்பங்களைச் சேர்ந்த 7023 நபர்கள்
பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் சில இடங்கள்
வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரணப் பணிகள் முன்னெடுப்பு

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மூன்று இடைத்தங்கல் முகாம்களில்
தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் செல்வநகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய
பொது மண்டபத்தில் 16 குடும்பங்களைச் சார்ந்த 53 நபர்களும் , எமில் நகர்
பகுதியில் அன்னை தெரேசா பாடசாலையில் 43 குடும்பங்களைச் சார்ந்த 158
நபர்களும், ஓலைத்தொடுவாய் பகுதியில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 11 நபர்கள்
இடம்பெயர்ந்து பொது இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் மன்னாரில் பெய்த கனமழை காரணமாக மொத்தமாக
1608 குடும்பங்கள் சார்ந்த 5883 நபர்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி
உள்ளனர்.

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 290 குடும்பங்களைச் சார்ந்த 1390 நபர்கள்
பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர்.

பாதிப்படைந்த மக்களுக்கு மன்னார் மாவட்ட செயலகம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர்கள் ஊடாக நிவாரணப் பணிகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version