வடக்கில் உள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே
அதிகம் கல்வி கற்கின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எமது மாகாணத்தவர்கள் அவற்றைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக உள்ளது. இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபம் நேற்று(17) யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரச வேலைவாய்ப்பு
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இன்றைய காலத்தில் தொழில் பயிற்சி மிக முக்கியமானது. அதன் அவசியம் இப்போது
எல்லோராலும் உணரப்படுகின்றது.
அரச வேலைவாய்ப்பு என்பது மட்டுப்படுத்தப்பட்ட
அளவாக மாறிக் கொண்டு வருகின்ற சூழலில், தனியார் வேலைவாய்ப்பையோ அல்லது
வெளிநாட்டு வேலைவாய்ப்பையோ பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் தொழிற்கல்வி
அவசியமானது.
வடக்கு மாகாணத்தில் போரால் அழிவடைந்த தொழிற்சாலைகளை மீள உருவாக்குவதற்கான
முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பாடசாலை இடைவிலகல்
அந்தத் தொழிற்சாலைகள் இங்கு மீள
இயங்கும்போது தொழில் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்புக்களில் முன்னுரிமை
கிடைக்கக் கூடிய சாத்தியம் இருக்கின்றது.
எதிர்காலத்தில் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளாமல் தொழில்களில் ஈடுபட முடியாத
நிலைமை உருவாகி வருகின்றது. எனவே, இன்று இங்கு சான்றிதழ்களைப்
பெற்றுக்கொள்ளும் நீங்களும், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தத் தொழில்
கல்வியின் அவசியத்தை எடுத்துக்கூற வேண்டும்.
பாடசாலை இடைவிலகலில் பெண்களை விட ஆண்களே அதிகமாக உள்ள நிலையில், இவ்வாறான
தொழில் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர்.
எனவே, கல்வியில் இருந்து இடைவிலகும் ஆண்களை இவ்வாறான தொழில் முயற்சிகளை நோக்கி
ஈர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
