நாசா அமைப்பின் புதிய முதன்மை விண்வெளித் தொலைநோக்கியான நான்சி கிரேஸ் ரோமன் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள கென்னடி விண்வெளி
மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ஹெவி ரொக்கெட் மூலம்
ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன
தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் இரகசியங்களான இருண்ட ஆற்றல், இருண்ட பருப்பொருள்
மற்றும் புதிய கிரகங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக
வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுவட்டப் பாதை
புவியிலிருந்து சுமார் 16 இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச்
பொயின்ட் 2 எனும் சுற்றுவட்டப் பாதையை நோக்கி இது பயணிக்கவுள்ளது.
ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிகளின் ஆற்றலை விடவும் அதிக பரந்த
பார்வைத்திறன் கொண்ட இந்தத் தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் விரிவான முப்பரிமாண
வரைபடத்தை (3D Map) உருவாக்கவுள்ளது.
ஹப்பிள் தொலைநோக்கி நூறாண்டுகளில் செய்யக்கூடிய விண்மீன் மண்டல ஆய்வுகளை
ரோமன் தொலைநோக்கியால் ஒரே மாதத்தில் செய்து முடிக்க முடியும் என விண்வெளி
ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறைந்தது ஐந்து ஆண்டுகள் வரை செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த
விண்வெளி ஆராய்ச்சி மையம், திட்டமிட்ட நேரத்திற்கு ஒன்பது மாதங்களுக்கு
முன்னதாகவே வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://tamilwin.com/article/nasa-state-art-roman-telescope-launched-into-space-1788112203
