Home இலங்கை சமூகம் சர்ச்சைக்குரிய நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் : நீதிமன்றம் வழங்கிய கட்டளை

சர்ச்சைக்குரிய நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் : நீதிமன்றம் வழங்கிய கட்டளை

0

பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளாகி மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் வழிபாடுகள்
மேற்கொள்ளப்பட்டுவரும் முல்லைத்தீவு (Mullaitivu) பழைய செம்மலை நீராவியடிப்
பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு நீதிமன்ற கட்டளை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தின் பொங்கல் உற்சவம் நேற்று (12.08.2025) இடம்பெற்ற நிலையில்
கொக்கிளாய் காவல்துறையினரால் நீதிமன்ற கட்டளை ஒன்று பெறப்பட்டு ஆலயத்தினருக்கு
வழங்கப்பட்டுள்ளது.

இந்த கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”இன்றையதினம் கொக்கிளாய் காவல்துறையினர் சார்பிலே கொக்கிளாய் காவல் நிலையத்தினுடைய
பதில் பொறுப்பதிகாரி அவர்கள் குறித்த AR அறிக்கை தாக்கல் செய்து குற்றவியல்
நடபடிமுறைச் சட்டக்கோவையின் 106/1, 106/2, 106/3 இன் கீழே தற்காலிக
தடைக்கட்டளையொன்றினைக் கோரி விண்ணப்பம் செய்துள்ளார்.

 புதிய பெயர் பலகைகள்

மேற்குறித்த தற்காலிக தடைக்கட்டளை தொடர்பான விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ள
விடயங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் தடைக்கட்டளையில் கோரப்படுகின்றவாறு
தொல்பொருள் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக இலக்கம் 2268/71 கொண்ட 2022.02.24ம்
திகதிய வர்த்தகமானி மூலம் பிரசுரிக்கப்பட்ட 26.8293 ஹெக்டேயர் அளவுடைய
பிரதேசத்திலே இத்தடைக்கட்டளையிலே சம்பந்தப்பட்டுள்ள நீராவியடி பிள்ளையார்
கோயில் அமைந்துள்ளதாகவும், அங்கு 2025.08.11 தொடக்கம் 2025.08.13ம் திகதி வரை
ஆலய உற்சவம் இடம்பெற்று ஆலய வழிபாட்டின் இறுதியில் குறித்த வர்த்தகமானியில்
வெளியிடப்பட்டுள்ள பிரதேசத்தில் புதிய பெயர் பலகையொன்றை அமைப்பதற்கான
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக நம்பகரமான தகவல்கள் தெரிய வந்துள்ளதாகவும்,
இவ்வாறான புதியவோர் பெயர் பலகையை தொல்லியல்பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக
வர்த்தகமானியிலே வெளியிடப்பட்ட நீராவியடி பிள்ளையார் கோயில் அல்லது அதற்கு
அண்மித்த பகுதியில் (அதாவது வர்த்தகமானியில் வெளியிடப்பட்டுள்ள பகுதிக்குள்
உள்ளடங்குகின்ற பகுதியில்) புதிதாக ஸ்தாபிப்பது அப்பகுதியிலே வேறு மத
வழிபாடுகளை மேற்கொள்கின்ற திறத்தவர்களுக்கும், குறித்த கோயில்
நிர்வாகத்தினருக்குமிடையில் முறுகல் நிலையினை உருவாக்குமெனவும், ஆகையால்
அமைதிக் குலைவு ஏற்படுவதற்கு சாத்தியமுள்ளதெனவும் தெரிவித்து எனவே இவ்வாறு
தொல்லியல் பாதுகாக்காப்பட்ட இடமாக வர்த்தகமானி மூலம் வெளியிடப்பட்ட
பிரதேசத்தில் புதிதாக பெயர் பலகைகள் எதனையும் நிறுவுவதை தடுக்கும் வகையிலே
தடைக்கட்டளை வழங்கமாறு விண்ணப்பமானது செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக தடை கட்டளை

மேற்படி விண்ணப்பம் அதில் கூறப்பட்ட நிகழ்வுகளை ஆராய்ந்ததன் அடிப்படையில்
சம்பந்தப்பட்ட திறத்தவர்களுக்கிடையில் முறுகல் நிலையொன்றினை தடுப்பதற்கு ஏற்ற
வகையில் தொல்லியல் பாதுகாக்கப்பட்ட இடமாக வர்த்தகமானியிடப்பட்ட பிரதேசத்தில்
புதிய பெயர் பலகை எதனையும் நிறுவ வேண்டாம் என தற்காலிக தடைக்
குறிப்பிடப்படுபவர்களுக்கு எதிராக மன்று கட்டளையொன்றை கீழே பிறப்பிக்கின்றது.

சிவபாதம் கணேஸ்புவன், முத்தையா குகதாஸ், சின்னதம்பி இராசா மற்றும் அவரின்
கீழ் செயலாற்றுகின்ற நபர்களுக்கு குறித்த தடைக்கட்டளையானது இன்றிலிருந்து 14
நாட்களுக்கு வலுவில் இருக்கும்.

குறித்த தற்காலிக தடை கட்டளை யாருக்கு எதிராக கோரப்பட்டிருக்கின்றதோ
அந்நபர்களான சிவபாதம் கணேஸ்புவன், முத்தையா குகதாஸ், சின்னதம்பி இராசா மற்றும்
அவரின் கீழ் செயலாற்றுகின்ற நபர்களுக்கு சேர்ப்பிக்குமாறும் அல்லதுநேரடியாக
சேர்ப்பிப்பது சாத்தியமற்றதெனின் குறித்த தொல்லியல் பாதுகாக்கப்பட்ட இடத்தில்
இக்கட்டளையினை ஒட்டி அல்லது வாசித்து விளங்கப்படுத்தப்படுமாறு
கட்டளையிடுகின்றது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 16 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version