Home விளையாட்டு இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் அதிபரிடம் கையளிப்பு

இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் அதிபரிடம் கையளிப்பு

0

இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) கையளிக்கப்பட்டுள்ளதாக அதிபரின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த சட்டமூலம், இன்று (15) அதிபர் அலுவலகத்தில் வைத்து ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறி தலைமையிலான நிபுணத்துவக் குழுவினரால் அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து தேடியறிந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக அமைச்சரவையினால் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டது.

கிரிக்கட் கட்டமைப்பு

அந்தவகையில், இந்த அமைச்சரவை உப குழுவில், அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி (Ali Sabry) தலைமையில், மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakara), பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) ஆகியோர் அங்கம் வகித்தனர்.

இதன்படி, அந்த குழு கிரிக்கட் துறையுடன் தொடர்புபட்ட சகல தரப்பினருடனும் ஆலோசித்து  சமர்ப்பித்த அறிக்கையில் இலங்கை கிரிக்கட் கட்டமைப்பை முழுமையாக மறுசீரமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீரர்களின் நல்வாழ்வு

இதற்கமைய தேசிய ஆண்கள், பெண்கள் அணிகள், 19 ,17 வயதுகுட்பட்ட பிரிவு அணிகள் உட்பட பல்வேறு மட்டத்திலான கிரிக்கெட் நிர்வாகம், பயிற்சி மற்றும் இருப்பு, வெளிப்படைத் தன்மை, தொழில் தன்மை மேம்பாடு, திறன், சமத்துவம், நியாயப்பாடு மற்றும் இலங்கை கிரிக்கட்டின் மூலதனமாக காணப்படும் பாடசாலை, மாவட்ட, மாகாண, கழக மட்டத்திலான மறுசீரமைப்புக்கான பரிந்துரைகள் உள்ளடங்கியுள்ளன.

மேலும்,இந்த நிகழ்வில், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும், அதிபரின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, அதிபரின் உதவிச் செயலாளர் சமித் தலகிரியாவ உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version