Home உலகம் புதிய பாப்பரசர் பட்டியலில் கொழும்பு பேராயர் ..! தற்காலிக பொறுப்பாளராக அமெரிக்க கர்தினால்

புதிய பாப்பரசர் பட்டியலில் கொழும்பு பேராயர் ..! தற்காலிக பொறுப்பாளராக அமெரிக்க கர்தினால்

0

திருத்தந்தையின் மறைவை அடுத்து அமெரிக்காவைச் (USA) சேர்ந்த கர்தினால் கெவின் ஃபாரல் வத்திக்கானின் இடைக்கால பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

கத்தோலிக்க திருச்சபையின் ஆன்மீக தலைவராக 12 வருடகாலம் பணியாற்றிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் (Pope Francis) 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நித்திய இளைப்பாற்றுதல் அடைந்தார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக வத்திக்கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை வத்திக்கான் மருத்துவர் ஆண்ட்ரியா ஆர்க்காங்கெலி வத்திக்கானால் வெளியிடப்பட்ட இறப்புச் சான்றிதழில் தெரிவித்துள்ளார்.  

ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்படும்

திருத்தந்தையின் மறைவை அடுத்து உலகம் முழுவதும் பல நாடுகள் துக்க காலத்தை அறிவித்துள்ளன.

இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் பல கிறிஸ்தவ இல்லங்களில் திருத்தந்தையின் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.  

மறைந்த பரிசுத்த பாப்பரசருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்படும் என பாரிஸ் நகர முதல்வர் அன்னே ஹிடால்கோ (Anne Hidalgo) அறிவித்துள்ளார்.

புதிய போப் தேர்வு

இதேவேளை, போப் பிரான்சிஸ் காலமானதை தொடர்ந்து, புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய பாப்பரசரை கத்தோலிக்க திருச்சபையின் மூத்த அதிகாரிகளான கர்தினால்மார்களே தெரிவுசெய்வார்கள்.

இவர்கள் அனைவரும் பாப்பரசரினால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள், தற்போது 252 கத்தோலிக்க கர்தினால்கள் உள்ளனர்.

இவர்களில் 138 பேர் புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கு வாக்களிப்பதற்கு தகுதி பெற்றவர்கள்.

ஏனையவர்கள் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதன் காரணமாக அவர்களால் பாப்பரசர் தேர்தலில் பங்கெடுக்க முடியாது. எனினும் யாரை தெரிவு செய்ய வேண்டும் என்ற விவாதத்தில் அவர்கள் கலந்து கொள்ளலாம்.

இரகசியமான முறையில் தேர்தல்

பாப்பரசரின் மரணத்திற்கும் புதியவர் தெரிவு செய்யப்படும் காலத்திற்கும் இடைப்பட்ட நாட்களில் கர்தினால்கள் அடங்கிய குழுவினர் நிர்வாகத்தினை பொறுப்பேற்பார்கள்.

மைக்கல் ஏஞ்சலோ ஓவியம் வரைந்த சிஸ்டைன் தேவாலயத்திற்குள் (Sistine Chapel) இந்த தேர்தல் மிகவும் இரகசியமான முறையில் இடம்பெறும்.

கர்தினால்கள் தங்கள் வாக்குச்சீட்டை ஒரு நாளைக்கு இரண்டு தடவை எரிப்பதால் வெளிவரும் புகை மாத்திரமே தேர்தல்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை தெரிவிக்கும்.

வெண்புகை வெளிவந்தால் அது புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டுவிட்டார் என்பதை உலகிற்கு தெரிவிக்கும் செய்தியாக காணப்படும்.

வெண்புகை தோன்றி ஒரு மணித்தியாலத்தின் பின்னர் புதிய பாப்பரசர் சென்பீட்டர்ஸ் சதுக்கத்தை பார்த்தவாறு அமைந்துள்ள பல்கனியில் தோன்றுவார். 

பெயர் பட்டியலில் கொழும்பு பேராயர் 

இந்நிலையில், அடுத்த பாப்பரசருக்கான தெரிவு பெயர் பட்டியலில் இலங்கையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை பல சர்வதேச ஊடகங்கள் பெயரிட்டுள்ளன.

குறித்த பதவிக்கு சாத்தியமான கர்தினால்களின் பெயர் பட்டியலில், வாஷிங்டன் எக்ஸாமினர், பிலிப்பைன்ஸின் கர்தினால் லூயிஸ் டேகிள், பிரான்சின் கர்தினால் ஜீன்-மார்க் அவெலின் மற்றும் இத்தாலியின் கர்தினால் பியட்ரோ பரோலின் போன்ற பிற முக்கிய நபர்களுடன் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டிற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இவ்வாறான செய்திகள் பல எதிர்பார்ப்புக்களை தூண்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.    

you may like this

https://www.youtube.com/embed/jgDOQEGQo_ohttps://www.youtube.com/embed/mdsHZk60ThY

NO COMMENTS

Exit mobile version