புதிய இணைப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சில நிமிடங்களுக்கு முன்பு அநுராதபுரம் தொடருந்து நிலையத்தில் தொடருந்து சமிக்ஞை அமைப்பை திறந்து வைத்தார்.
அத்துடன், நவீனமயமாக்கப்பட்ட மஹா – ஓமந்தை தொடருந்து பாதையும் இந்தியப் பிரதமரால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுகளில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
தொடர்புகளை மேம்படுத்தல் மற்றும் நட்புறவை வலுவாக்கல்!
அநுராதபுரத்தில், மாஹோ-ஓமந்தை இடையேயான தரமுயர்த்தப்பட்ட புகையிரதப் பாதையினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களும் நானும் கூட்டாக அங்குரார்ப்பணம் செய்துவைத்தோம். அதேபோல மாஹோ முதல் அனுராதபுரம் வரையிலான தொகுதிக்குரிய நவீன… pic.twitter.com/Uk2TSHXN2E
— Narendra Modi (@narendramodi) April 6, 2025
இரண்டாம் இணைப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபடுவதற்காக சற்றுமுன்னர் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது இந்தியப் பிரதமர், அட்டமஸ்தானாதிபதி ஷ்யாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்து பிரிவின் பிரதம பீடாதிபதி அதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.
இதற்கிடையில், தனது எக்ஸ் (X) கணக்கில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரம் நகருக்கு சென்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
அந்தப் பதிவில் “அநுராதபுரத்தில் உள்ள ஜய ஶ்ரீ மகா போதியில் ஜனாதிபதி திசாநாயக்க அவர்களுடன் இணைந்து வழிபாடுகளை மேற்கொண்டிருந்தேன்“என குறிப்பிட்டிருந்தார்.
அநுராதபுரத்தில் உள்ள ஜய ஶ்ரீ மகா போதியில் ஜனாதிபதி திசாநாயக்க அவர்களுடன் இணைந்து வழிபாடுகளை மேற்கொண்டிருந்தேன். பௌத்தமதத்தின் அதி சிறப்புமிக்கதும் மதிப்புக்குரியதுமான ஸ்தலங்களில் ஒன்றான இத்தலத்தில் வழிபாட்டினை மேற்கொள்வது உண்மையில் மிகவும் பணிவுக்குரிய தருணமாகும். அமைதி, ஞானம்… pic.twitter.com/OBCc0mQv68
— Narendra Modi (@narendramodi) April 6, 2025
முதலாம் இணைப்பு
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ள நரேந்திர மோடி இன்று (06) அநுராதபுரம் (Anuradhapura) ஸ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடவுள்ளார்.
ஸ்ரீ மகா போதியில் வழிபாட்டில் ஈடுப்பட்ட பிறகு, இந்திய அரசாங்கத்தின் பரிசாக நிறுவப்பட்ட மஹவ – அநுராதபுரம் தொடருந்து சமிக்ஞை அமைப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட மஹவ-ஓமந்தை தொடருந்து மார்க்கமும் உத்தியோகபூர்வமாக இந்தியப் பிரதமரால் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
விசேட போக்குவரத்துத் திட்டம்
இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அநுராதபுரம் விஜயத்தை முன்னிட்டு இன்று அனுராதபுரம் நகரில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதன்படி அனுராதபுரம் விமானப்படை தளத்திலிருந்து ஸ்ரீ மகா போதி, வைத்தியசாலை சுற்றுவட்டம், ஹரிச்சந்திர மாவத்தை, மாகாண சபை சுற்றுவட்டம், மணிக்கூண்டு சுற்றுவட்டம் மற்றும் குருநாகல் சந்திப்பு வரையிலான வீதிகள் காலை 8.30 மணி முதல் மூடப்படும் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஸ்ரீ மகா போதிக்கு அருகிலிருந்து அநுராதபுரம் தொடருந்து நிலையத்திற்குச் செல்லும் வீதிகள் மற்றும் அனுராதபுரம் தொடருந்து நிலையத்திலிருந்து விமானப்படை தளத்திற்குச் செல்லும் வீதிகள் இன்று காலை 11 மணி வரை அவ்வப்போது மூடப்படவுள்ளன.
இந்த வீதிகள் மூடப்படும் போது, மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளிடம் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
