Home இலங்கை கல்வி யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாக மூன்று பேராசிரியர்கள் நியமனம்

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாக மூன்று பேராசிரியர்கள் நியமனம்

0

யாழ். பல்கலைக்கழகத்திற்கு மூன்று புதிய  பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த நிகழ்வு, இன்றைய தினம் பல்கலைக்கழகப் பேரவையில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றுள்ளது.  

இதன்படி, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் திறமை
அடிப்படையில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ஒருவர் திறந்த விளம்பரப்படுத்தல்
அடிப்படையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் நியமனம்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை
அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த சேர். பொன்னம்பலம் இராமநாதன்
காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் இசைத்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட
விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா அரவிந்தன் மற்றும் முகாமைத்துவ கற்கைகள்
மற்றும் வணிக பீடத்தின் சந்தைப்படுத்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட
விரிவுரையாளர் கலாநிதி சிவராஜா ராஜ்உமேஸ் ஆகியோர் பேராசிரியர்களாகப் பதவி
உயர்த்தப்பட்டுள்ளனர். 

அத்துடன், திறந்த விளம்பரப்படுத்தல் அடிப்படையில் பேராசிரியர்
பதவிக்கு விண்ணப்பித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய
நிபுணர் உருத்திரபசுபதி மயூரதன் பேராசிரியராக நியமனமும் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், புதிதாக நியமனம் செய்யப்பட்ட மூவரின் விண்ணப்ப மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் என்பன பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றின் அடிப்படையில், சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள்
பீடத்தின் இசைத்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா
அரவிந்தன் இசையியல் பேராசிரியராகவும், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக
பீடத்தின் சந்தைப்படுத்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி
சிவராஜா ராஜ்உமேஸ் சந்தைப்படுத்தலில் பேராசிரியராகவும்
பதவியுயர்த்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய
நிபுணர் உருத்திரபசுபதி மயூரதன் சட்ட வைத்தியப் பேராசிரியராக நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.

மேலும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சட்ட வைத்தியத்துறைக்குச் சுமார்
30 வருடங்களின் பின்னர் பேராசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version