பருத்தித்துறை (point Pedro) நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போலினால் பூட்டப்பட்ட நிலையில்
காவல்துறையினரின் தலையீட்டில் புதிய மரக்கறி சந்தையிலும் வியாபார நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பருத்தித்துறை மரக்கறி சந்தை விவகாரம் நீண்டகாலமாக நீடித்து வரும் நிலையில்
பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியில் புதிய மரக்கறி சந்தையில் வியாபார
நடவடிக்கையினை தொடர்ந்து வந்தனர்.
தற்போது மழை வெள்ளம் சந்தை வளாகத்தில் தேங்கி வருவதால் பெரும்
அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கும் நிலை காணப்பட்டு வருகின்றது.
காவல்துறையில் முறைப்பாடு
புதிய மரக்கறி சந்தை நகரபிதாவினால் பூட்டப்பட்டது. இதற்கு
எதிராக நகரசபை செயலாளர் தாரணி கஜரூபன் பருத்தித்துறை காவல்துறையில் முறைப்பாடு
செய்திருந்தார்.
இதையடுத்து பருத்தித்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க
நகரசபை செயலாளர் மற்றும் தவிசாளர் தரப்பை நேரில் அழைத்து விசாரித்திருந்தார்.
இது விடயம் தொடர்பில் பருத்தித்துறை நீதிமன்றத்தை நாடி நடவடிக்கை எடுக்கும்
வரை புதிய மரக்கறி சந்தையிலும் வியாபார நடவடிக்கையினை தொடர வழிவகை செய்யுமாறு
அவரால் சுட்டிக்காட்டப்பட்டதற்கு அமைவாக தவிசாளரினால் புதிய சந்தை திறந்து
விடப்பட்டது.
மண்ணெண்ணை போத்தலுடன் வியாபார நடவடிக்கை
முதலாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள புதிய மரக்கறி சந்தையில் ஐந்து
வியாபாரிகள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் நவீன சந்தை
கட்டடத்தொகுதியின் மேல் தளத்தில் இருபது வரையான வியாபாரிகள் வியாபார
நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு பழைய சந்தை கட்டட தொகுதியில் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும்
வியாபாரிகள் கையில் மண்ணெண்ணை போத்தலுடன் வியாபார நடவடிக்கையை முன்னெடுத்து
வருகின்றனர்.
இதன்போது கருத்து தெரிவித்த வியாபாரிகள் தங்களை பழைய சந்தையில் இருந்து
அகற்றினால் மண்ணொண்ணையை ஊற்றி உயிர்மாய்க்க செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர்.
