Home இலங்கை குற்றம் வட மாகாணத்தில் மக்களுக்கு சேவை செய்வதென்பதும் சவாலாக உள்ளதாக ஆளுநர் தெரிவிப்பு

வட மாகாணத்தில் மக்களுக்கு சேவை செய்வதென்பதும் சவாலாக உள்ளதாக ஆளுநர் தெரிவிப்பு

0

வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு மக்களுக்கு சேவை செய்வதென்பதும் மிகச்சவாலான விடயம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

கரைச்சிப் பிரதேச செயலகத்தில் நேற்று (22.12.2024) இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண
ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

கிளிநொச்சி மாவட்ட செயலராக நான் பணியாற்றியபோது இறுதிக்கட்டப்போர்
ஆரம்பமானது. இந்த மாவட்ட மக்களுடன் நானும் இடம்பெயர்ந்து
செல்லவேண்டியிருந்தது. அப்படியானதொரு மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வில்
பங்கேற்பதில் பெரும் மகிழ்வடைகின்றேன்.

சிறப்பான சேவை

எந்த வசதிகளும் இல்லாமல் அன்றைய எமது பணிக்காலம் இருந்தது. ஆனாலும் மக்களுக்கு
சிறப்பான சேவைகளை வழங்கியிருந்தோம்.

உங்களுடைய தற்போதைய மாவட்டச் செயலர் சு.முரளிதரன் நேர்மையான ஒருவர். மக்களின்
துன்பங்களை அறிந்து அவர்கள் துயர்துடைக்கக்கூடிய ஒருவர்.அவர் உங்களுக்கு
மாவட்ட செயலராக கிடைத்தமை சிறப்பானது.

இன்றைய இளையோர்களிடம் மற்றவர்களை மதிக்கும், உதவி செய்யும் பண்புகளைக் காண
முடியவில்லை. தவறு செய்பவர்களை தட்டிக்கேட்க முடியாத நிலைமை இருக்கின்றது.
வீதிகளில் குப்பைபோடுகின்றோம். வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால்களை
ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டுகின்றோம்.

ஒழுக்கமில்லாத சமுதாயமாக நாங்கள் மாறிக்கொண்டு போகின்றோம். மிகக் கவலையாக
இருக்கின்றது.
விழா மண்டபத்தை இந்தப் பிரதேச செயலக அலுவலர்களே அதிகமாக
நிரப்பிக்கொண்டிருப்பதாக பிரதேச செயலரும், மாவட்டச் செயலரும் என்னிடம்
சொன்னார்கள்.உண்மையில் வேதனையாக இருக்கின்றது.

ஆசிரியர்களின் இடமாற்றம் 

இதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலருக்கு அடுத்த நிலையிலுள்ள ஒரு
அதிகாரிக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில்
முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாக அணுகுமாறுகூறி விட்டு அவர்களை அவரிடம்
அனுப்பினேன்.

அந்த அதிகாரி தனது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்
பங்கேற்றுவிட்டு ஆசிரியர்களை, இரவு 7 மணிக்குத்தான் அலுவலகத்தில்
சந்தித்திருக்கிறார். ஆசிரியர்களை மிக மோசமான முறையில் பேசி திருப்பி
அனுப்பியிருக்கின்றார்.

இவ்வாறான அலுவலர்கள் எமது மாகாணத்தில் எனக்கு கீழ்
இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும்போது வெட்கமாக இருக்கின்றது.

எங்களுக்கு பதவிகள் தரப்பட்டது மக்களுக்கு சேவைசெய்யவே. அதை சகல அலுவலர்களும்
மனதிலிருத்துங்கள்.
உங்களிடம் சேவைக்காக பொதுமக்கள் வரும்போது, அந்தப் பொதுமகனாக நீங்கள்
இருந்தால் எப்படி நடந்துகொள்வீர்கள்?

அப்போது உங்களுக்கு பேசுவதற்கு அல்லது
மனிதநேயமற்று நடப்பதற்கு மனம்வருமா? எனவே தற்போதுள்ள சகல வசதிகள், ஆளணிகளை
வைத்துக்கொண்டு எங்களுக்கு மக்களுக்கு சகலரும் சிறந்த சேவைகளை வழங்க
முன்வரவேண்டும் என்றார்.

NO COMMENTS

Exit mobile version