Courtesy: uky(ஊகி)
வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் பாடசாலைகளுக்கான வெளிவாரி மதிப்பீடுகள் தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
கல்விசார் நோக்குநர்களால் இச்சந்தேகங்கள் எழுப்பப்பட்டுகின்றன. நவீன கற்றல் முறைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அவர்கள் தங்கள் அவதானங்களின் அடிப்படையில் தமக்கு சந்தேகங்கள் தோன்றுவதாக குறிப்பிடுகின்றனர்.
வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் கல்விசார் செயற்பாடுகள் தொடர்பிலும் அப்பாடசாலைகளின் சமூக தொடர்பாடல் மற்றும் அக, புற நிலைகளில் உருவாக்கப்படும் எண்ணக்கருக்கள் என்பன தொடர்பிலும் அவர்கள் தங்கள் அவதானிப்புக்களைச் செய்து வருகின்றனர்.
இவற்றுக்காக பெறப்படும் தகவல்களை பகுப்பாய்வு செய்து கொள்வதன் மூலம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி முறை அந்நாட்டின் குடிமக்களின் வாழ்வியலில் எத்தகைய செல்வாக்கினைச் செலுத்துகின்றது என ஆராய்ந்து கொள்வதை நோக்காக கொண்டு பயணிப்பதாக அவ்வாய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தகவல் பெறப்படும் முறை
கருதுகோள்களை உருவாக்கி, அதனடிப்படையில் பாடசாலைகளைத் தெரிவு செய்து கொண்டு, அப்பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
பின்வரும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தகவல் சேகரிப்பு வழிமுறைகளை அவர்கள் பின்பற்றி வருகின்றனர்.
01) தேசிய மட்டத்தில் நடைபெறும் பரீட்சை முடிவுகள்
02) தேசிய மட்ட விளையாட்டுக்களில் கிடைக்கும் வெற்றி வாய்ப்புகள்
03) தேசிய மட்ட மொழி, கலை சார் போட்டிகளில் கிடைக்கும் வெற்றிகள்.
04) தேசிய மட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் அளவு.
05) மாணவர்களின் சமூகத் தொடர்புகள்.
06) மாணவர்களின் சுய ஒழுக்கம்.
07) மாணவர்களின் சுய ஆற்றல்.
08) பாடசாலையின் கடந்த கால வரலாறு.
09) பாடசாலை ஆசிரியர் குழாமின் ஆளுமை.
10) பாடசாலையின் ஆசிரியர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை
11) பாடசாலையின் நிர்வாக ஒழுங்கு
12) பாடசாலையின் செயற்பாடுகள் மீது வலயக்கல்வி பணிமனையின் அணுகுமுறை
13) பாடசாலையின் செயற்பாடுகள் மீது தனிநபர்களின் செல்வாக்கு
14) பாடசாலை மீது பிராந்திய அரசியலாளர்களின் செல்வாக்கு
15) பாடசாலையின் பழைய மாணவர்களின் சமூகச் செயற்பாடுகள்
16) பாடசாலையின் பழைய மாணவர்களின் தனிப்பட்ட ஆளுமைகள் ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தகவல்களைப் பெற்று தங்கள் பகுப்பாய்வினை அவர்கள் மேற்கொண்டு வருவதாக அவர்கள் தங்கள் ஆய்வுகள் தொடர்பில் விபரித்திருந்தனர்.
மதிப்பீட்டுப் பண்பு தரச்சுட்டிகள்
கல்வி முறைமையின் விளைவுகளை ஆராயும் அவர்களது முயற்சியில் வடக்கு மாகாணத்தில், மாவட்டத்திற்கு இரண்டு பாடசாலைகள் என்ற அடிப்படையில் அவர்களது தெரிவு இருப்பதையும் இங்கே சுட்டிக்காட்டலாம்.
முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயம் தொடர்பில் அவர்கள் தொடர்ச்சியாக தங்கள் அவதானத்தினை மேற்கொண்டு வருவதாகவும் எடுத்துரைத்திருந்தனர்.
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் வடமாகாண கல்வித்திணைக்களம் மேற்கொண்ட வெளிவாரி மதிப்பீட்டின் போது தெரிவு செய்யப்பட்ட சுட்டிகள் சில தொடர்பில் சரியான மதிப்பீட்டினை செய்யவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
01) மாணவர் அடைவு 02) கற்றல் கற்பித்தல் மற்றும் மதிப்பீடு
03) முறையான கலைத்திட்ட முகாமைத்துவம் 04) இணைப்பாட விதான செயற்பாடுகள் 05) மாணவர் நலன்புரி 06) தலைமைத்துவமும் முகாமைத்துவமும் 07) பௌதீக வள முகாமைத்துவம் 08) பாடசாலையும் சமூகத் தொடர்பும் ஆகிய எட்டு மதிப்பீட்டுத் துறைகளில் 210 சுட்டிகளை இலக்காக கொண்டு அந்த வெளிவாரி மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
210 சுட்டிகளில் 188 சுட்டிகள் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட்டு பாடசாலைக் கல்விப் பண்புத் தரச் சுட்டியாக 48 வீதம் காட்டப்பட்டுள்ளது.
இந்த பண்புத்தரச் சுட்டி மிகச்சரியான மதிப்பீடுகளை உண்மை நிலைகளை அடிப்படையாக் கொண்டு மேற்கொண்டிருந்தால் இதிலும் குறைவாக அமையும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாடசாலையும் சமூகத் தொடர்பும்
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் பாடசாலைக்கும் அதன் வெளிச்சமூகமான பழைய மாணவர் சங்கத்தினருடனும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினருடனும் திருப்திகரமான உறவுகள் பேணப்பட்டிருக்காத போது 53 வீதமான புள்ளிகளை வழங்கி உறவு நிலையை சாதாரணமானது என காட்டப்பட்டுள்ளது.
மதிப்பிட வேண்டிய 13 சுட்டிகளில் அனைத்துச் சுட்டிகளும் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பெறக்கூடிய மொத்தப் புள்ளிகள் 78 ஆக இருக்கும் போது அதில் 41 புள்ளிகளை பாடசாலை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அதிபர் பாடசாலையை பொறுப்பேற்ற ஆரம்ப நாட்களில் இருந்து ஏற்பட்ட முரண்பாடுகள் இதுவரை தீர்வு காணப்படாது உறவு நிலை அதிக விரிசலுக்குள்ளாகி போகின்றதனை எவ்வாறு 53 வீதமாக மதிப்பிட்டிருந்தனர் என்ற கேள்வி எழுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பௌதீக வள முகாமைத்துவம்
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் பௌதீக வள முகாமைத்துவம் தொடர்பிலும் சரியான மதிப்பீடுகள் இருப்பதாக உணர முடியவில்லை.
பாடசாலையின் மலசல கூடம் மற்றும் கட்டடங்களின் நிலை, குடிநீர் தாங்கி மற்றும் பாடசாலையின் வளாகம் என எல்லா பௌதீக வளங்களிலும் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதும், அவை இன்றளவும் சீர் செய்யப்படாத நிலையில் எப்படி பௌதீக வள முகாமைத்துவம் 51 வீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தை அவர்கள் எழுப்புகின்றனர்.
26 பண்புச்சுட்டிகளில் 25 பண்புச்சுட்டிகள் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் 150 பெறக்கூடிய மொத்தப் புள்ளிகளில் 77 புள்ளிகளையே பாடசாலை பெற்றுக்கொண்டுள்ளது.
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் உள்ள பௌதீக வள முகாமைத்துவம் மிக நேர்த்தியாக பேணப்படுமிடத்து ஆரோக்கியமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை இலகுவாக முன்னெடுத்து சிறந்த அடைவு மட்டங்களை வெளிப்படுத்நியிருக்கலாம் என அவர்கள் வாதிடுகின்றனர்.
தலைமைத்துவமும் முகாமைத்துவமும்
தலைமைத்துவமும் முகாமைத்துவமும் என்ற பண்புத்தரச் சுட்டி தொடர்பில் திருப்தி அடைய முடியாத ஒரு சூழ்நிலையில் இப்பாடசாலை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாடசாலையின் நிர்வாகத் தலைமைத்துவம் மற்றும் பாடசாலையின் ஏனைய துறைசார் தலைமைத்துவங்கள் சரிவர இல்லாமையினாலேயே தான் பாடசாலையின் அகச்சூழல் மோசமடைந்தது சென்றது.
மாணவ முதல்வர்கள் முதல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து மட்டங்களிலும் நிர்வாக ஒழுங்கீனங்கள் ஏற்படுவதற்கு தலைமைத்துவ முகாமை சரிவர இல்லை என்பதை மிக இலகுவாக பாடசாலையின் இன்றைய அச்சூழல் தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டி நிற்கின்றது.
இது இவ்வாறிருக்கும் போது பண்புத்தரச் சுட்டிகள் 45 இல் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டுப் புள்ளிகள் இடப்பட்டுள்ளன. அவ்வாறு இடப்பட்ட புள்ளிகளில் 129 புள்ளிகளை பெற்றுள்ளதாக வெளிவாரி மதிப்பீட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 270 மொத்தப் புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் 129 புள்ளிகளைப் பெற்றுள்ளதாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பாடத்துறைகளில் கிடைக்கப்பெற்ற தேசிய பரீட்சை முடிவுகளில் கூட சிறந்த அடைவு மட்டங்களைப் பெற்றுக்கொண்டதாக கருத முடியாது.பாடத்துறை தலைமைத்துவம் சரிவர இல்லை என்பதையே இது சுட்டி நிற்கின்றது.
மிகைப்படுத்தல் ஏன்?
பாடசாலை ஒன்றின் வெளிவாரி மதிப்பீட்டில் இப்பாடசாலை தொடர்பான பண்புத்தரச் சுட்டிகளை சரியான முறைகளில் பரிசோதனைக்குட்படுத்தி முடிவுகளை வெளிப்படுத்துவதில் முனைப்புக்காட்ட வேண்டும்.
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் பண்புத்தரச் சுட்டிகளின் பரிசோதனை முடிவுகளாக வெளியிடப்பட்ட மதிப்பீடு சற்றே மிகைப்பட்டுள்ளதாக கல்விசார் நோக்குநர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கில் உள்ள பாடசாலைகளில் ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர்களை தரம் மூன்றில் இருந்து தரம் 11 வரையான வகுப்புக்களுக்கு நியமித்துள்ள போதும், அவர்களால் கிரமமாக பாடப்பரப்புக்கள் கற்பிக்கப்பட்டு வருவதாக பதிவுகள் அனைத்தும் எடுத்துரைத்த போதும் க.பொ.த.(சா/த) பரீட்சையில் சிறந்த ஆங்கில மொழித் தேர்ச்சியைப் பெற்ற மாணவர்களின் வீதம் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கின்றன.
ஆங்கில பாடத்தில் சிறப்புத் தேர்ச்சியைப் பெற்ற பல மாணவர்களிடையே ஆங்கில புரிதல்களை அவதானிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமையும் இருந்து வருவதை அவதானிக்கலாம்.
இந்த நிலையினைச் சுட்டிக்காட்டிய கல்விசார் நோக்குநர்கள் ஆங்கில மொழி கற்பித்தலில் வடமாகாண கல்வித் திணைக்களம் தோல்வியுற்று விட்டதாகவே குறிப்பிடுகின்றனர்.
பாடசாலைகள் தொடர்பிலான வலுவான, இறுக்கமான நிர்வாக நடைமுறைகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் பண்புத்தரச் சுட்டிகள் மீதான பரிசோதனைகளே பயனுடையதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை.