Home இலங்கை சமூகம் அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை

அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை

0

வடக்கு மாகாணத்தில் பின்தங்கியுள்ள பிரதேசங்களை கல்வியால்தான் அபிவிருத்தி
செய்ய முடியும் எனவே அதைக் கவனத்தில் எடுத்து அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள்
பணியாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார
அமைச்சின் துறைசார் மீளாய்வுக் கூட்டம் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை நிகழ்வுகள்

மேலும் தெரிவிக்கையில், “விஞ்ஞானப் பிரிவை உயர்தரத்தில் தெரிவு செய்யும் மாணவர்கள் சிலர், தமது பிரதேச
பாடசாலைகளில் அந்தக் கற்கை நெறியை தொடர்வதற்குரிய ஆசிரியர்கள் இல்லாமல்
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வேறு நகரங்களுக்குச் சென்று அங்கு தங்கியிருந்து கல்வி கற்கின்றனர்.

இவ்வாறு கல்வியை தொடரும் மாணவர்களில் சிலர், அதனை ஒழுங்காகத்
தொடராது தவறான வழியில் செல்லும் சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

எனவே, சகல
பாடசாலைகளிலும் விஞ்ஞானப் பிரிவை உயர்தரத்தில் மாணவர்கள் தெரிவு செய்தால்,
அதைக் கற்பிப்பதற்கு ஆசிரியர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பாடசாலையில் நடக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும் மாணவர்களிடமோ, ஆசிரியர்களிடமோ
எந்தவொரு கட்டணமும் அறவிடக் கூடாது. அரசின் சுற்றறிக்கையும் அதைத் தெளிவாகக்
குறிப்பிட்டுள்ளது.

கட்டண அறவீடுகள் நடக்காமல் இருப்பதை கல்வி அமைச்சின்
செயலர் கவனித்துக்கொள்ள வேண்டும்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் முன்னேற்றம்

ஆசிரியர்கள் பலர் கல்வி அலுவலகங்களுக்குச் சென்றால் அவர்களை அதிகாரிகள்
சந்திப்பதில்லை என்ற முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன. அவ்வாறு
செயற்படக்கூடாது. அவர்களுக்கு சேவையாற்றுவதற்காகத்தான் நாங்கள் இருக்கின்றோம்.

எனவே, ஆசிரியர்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும்.

ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்படும்போது திறமையான ஆசிரியர்களுக்கு
முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

வடக்கு மாகாணம் 2030 ஆம் ஆண்டு கல்வியில்
முதலிடத்துக்கு வரவேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துப் பயணிக்க வேண்டும். அதை
நோக்கி அடுத்தடுத்த ஆண்டுகளில் முன்னேறிச் செல்ல வேண்டும்“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version