விவசாயிகளின் பொருட்களின் உற்பத்தித் தரத்தை மேம்படுத்துவதுடன் சந்தை வாய்ப்பை தொடர்ச்சியாகப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N. Vethanayagan) தெரிவித்துள்ளார்.
விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தல் தொடர்பாக நேற்று(26) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் உரையாற்றிய ஆளுநர், “முன்னைய காலங்களில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதை நினைவுகூர்ந்ததுடன் தற்போது அவை அருகிச் செல்கிறது.
விவசாயிகளின் பிரச்சினை
மேலும் விவசாயத்துடன் தொடர்புடைய அலுவலர்கள் களத்துக்குச் சென்று விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய வேண்டும்.
சியாப் திட்டத்தின் கீழ் எமது மாகாணத்துக்கு அடுத்த ஆண்டு 100 கோடி ரூபா நிதி கிடைக்கவுள்ள நிலையில் அதை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும்.
எந்தவொரு காரணத்துக்காகவும் அந்த நிதி செலவழித்து முடிக்கப்படாமல் இருக்கக் கூடாது.
குறிப்பாக ஏ.எஸ்.எம்.பி. திட்டத்தின் கீழ் 4 பயிர்களின் செய்கை (மிளகாய், கச்சான், பஷன் புருட், மாதுளை) ஏற்றுமதி நோக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதிகளவான விவசாயிகள் எதிர்காலத்தில் இந்தப் பயிர்ச்செய்கையில் ஈடுபடவேண்டுமாயின் சந்தை வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
வடக்கில் 17 கமக்கார நிறுவனங்கள் (Farmer company) இந்தப் பயிர்ச்செய்கைக்காக உருவாக்கப்பட்டுள்ளன என்பதுடன் அதன் ஊடாக சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் என்பன முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விவாயத்துறை மேம்பாடு மற்றும் நவீனமயப்படுத்தலுக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதுடன் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்ப்பதற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.” என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.