Home இலங்கை அரசியல் வடக்கு மனிதப் புதைகுழிகள் குறித்து நீதியமைச்சர் முன்வைத்த கருத்து.. எதிர்க்கட்சி கண்டனம்

வடக்கு மனிதப் புதைகுழிகள் குறித்து நீதியமைச்சர் முன்வைத்த கருத்து.. எதிர்க்கட்சி கண்டனம்

0

வடக்கில் பல மனிதப் புதைகுழிகள் இருப்பது வதந்திகள் என நீதி அமைச்சர் ஹர்ஷன
நாணயக்கார தெரிவித்துள்ளமையைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம். அவர் இதுவரை
காலமும் தூக்கத்தில் இருந்தாரா என்று ஐக்கிய மக்கள்
சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக கேள்வி எழுப்பியுள்ளார். 

மண்டைதீவு மனிதப் புதைகுழி உட்பட வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள்
குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும்,
சரியான தகவல்கள் இல்லாமல் அரசு இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை
என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்திருந்தார்.

அநுரவிடம் கோரிக்கை 

இந்நிலையில், இது தொடர்பில் கயந்த கருணாதிலக கருத்து தெரிவிக்கையில்,

“போர்க் காலத்திலும் சரி, போர் நிறைவுக்கு வந்த பின்னரும் வடக்கில் பல மனிதப்
புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுத் தோண்டப்பட்டன. தற்போது யாழ்ப்பாணத்திலும்
ஒரு மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய
தோண்டப்பட்டு வருகின்றன.

ஆனால், போர் நடைபெற்ற காலத்தில் அடையாளம் காணப்பட்ட
செம்மணிப் புதைகுழி தவிர வேறு எந்தப் புதைகுழி தொடர்பிலும் வடக்கு மக்களுக்கு
நீதி கிடைக்கவில்லை.

இந்நிலையில், வடக்கில் பல மனிதப் புதைகுழிகள் வதந்திகள் என்று நீதி அமைச்சர்
ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளமையைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம்.

அவர் இதுவரை
காலமும் தூக்கத்தில் இருந்தாரா? நீதி அமைச்சர் என்ற பதவி நிலையை மறந்து அவர்
பொறுப்பற்ற விதத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய
வேண்டும்.” என்றார்.

NO COMMENTS

Exit mobile version