Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது வருமானங்களையும் அதிகரிக்க வேண்டும் – வடக்கு ஆளுநர்

உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது வருமானங்களையும் அதிகரிக்க வேண்டும் – வடக்கு ஆளுநர்

0

உள்ளூராட்சி மன்றங்கள் சேவைகளை வழங்குவதற்கும் மேலாக தங்களது வருமானங்களையும்
அதிகரிக்க வேண்டும், அதற்குத் தேவையான திட்டங்களை உருவாக்கி, உள்ளூர் கடன்கள்
அபிவிருத்தி நிதியத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 

உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்பாக வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும்
செயலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள
முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகில் இன்று (13.11.2025)
நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டியது அவசியம்

அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் பிரதேசங்களுக்கு முதலீட்டாளர்களை
ஈர்க்க வேண்டியது அவசியம். முதலீட்டாளர்களுக்குத் தேவையான
அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வழங்க வேண்டும். அதேபோன்று ஏற்கனவே முதலீடு
செய்தவர்கள் ‘அவர்கள் எங்களுக்கு வரி செலுத்துகின்றனர்’ என்ற அடிப்படையில்,
அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

ஆனால் இந்த விடயங்களில் சில
உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை. எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது சொந்த வருமானத்தின்
அடிப்படையிலேயே சபைகளை நிர்வகிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதற்குத்
தயாராக தற்போது முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும்.

விழிப்புணர்வு

உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியத்தை மட்டுமல்லாது,
வங்கிக் கடன்கள் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் உதவிகளைப் பற்றிய விழிப்புணர்வு
வட மாகாணத்தில் குறைவாக உள்ளது. இதேநேரத்தில் தென்பகுதியிலிருந்து
அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்குக் காரணம் மக்களிடையிலும்,
எங்களது களநிலை அலுவலர்களிடையிலும் தேவையான விழிப்புணர்வு இல்லாமையாகும்.

இதை மாற்றும் நோக்கத்துடன், வடக்கு மாகாணத்தில் உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி
நிதியின் செயற்பாடுகளை விரிவாக்கும் வகையில் இவ்விழிப்புணர்வு செயலமர்வு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்கள்
தங்களது நிலைத்தாபன அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான கடன்களை இந்த
நிதியத்திலிருந்து பெற்றுக்கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version