Home இலங்கை சமூகம் நுவரெலியாவில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

நுவரெலியாவில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

0

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் கடந்த சில நாட்களாக
மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளது.

நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக
மரக்கறிகளின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

இதன் காரணமாக விற்பனை குறைந்துள்ளதுடன், அவை தேங்கி அழுகி குப்பையில்
கொட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் தக்காளி, லீக்ஸ், கத்தரிக்காய், பயிற்றங்காய், வெள்ளரிக்காய், கோவா,
நோக்கோல், முள்ளங்கி, பீட்ரூட், கறி மிளகாய், பச்சை மிளகாய்
கரட், போஞ்சி, ஆகியவற்றின் விலை அதிகம் குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள்
தெரிவித்துள்ளனர்.

மரக்கறி விலைகளில் வீழ்ச்சி

அத்துடன் நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறி விற்பனை
நிலையங்களில் பாவனைக்குதவாத அழுகிய நிலையில் மரக்கறிகளை வர்த்தக
நிலையங்களுக்கு முன் சேர்த்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றை அப்புறப்படுத்த
முடியாது, நகரசபையின் ஊழியர்கள் உள்ளடங்கலாகப் பலரும் பாரிய
திண்டாட்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவற்றை காலை நேரங்களில் மட்டக்குதிரை உள்ளிட்ட சில கால்நடைகள் தீவனமாக உண்ணும்
நிலை அதிகரித்துள்ளது.

நாட்டில் அதிகளவில் மரக்கறி உற்பத்தி செய்யப்படுகின்ற மாவட்டங்களில்
நுவரெலியாவும் ஒன்றாகும்.

எனினும் தற்போது நுவரெலியா பிரதேச
செயலகத்திற்குட்பட்ட பல இடங்களில் விவசாய செய்கைகள் கைவிடப்பட்ட நிலையில்
இன்று காட்சியளிக்கின்றன மரக்கறி வகைகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத
வீழ்ச்சியால் இந்த நிலைமை ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் பாரிய முதலீட்டுடனேயே, மரக்கறிச் செய்கைகளை மேற்கொண்டதாகத்
தெரிவிக்கும் விவசாயிகள், மரக்கறிகளின் சந்தைப் பெறுமதி குறைவடைந்துள்ளதால்,
தாம் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version