Home இலங்கை சமூகம் காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை இடைநிறுத்தம்

காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை இடைநிறுத்தம்

0

ஹம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுரம் பகுதிகளில் சர்ச்சைக்குரிய வகையில்
முன்னெடுக்கப்பட்ட காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கையை அரசாங்கம்
இடைநிறுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூகக் குழுக்களின் பரவலான எதிர்ப்பு மற்றும்
நடவடிக்கையை நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதைத்
தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 பல நாட்கள் பொதுமக்களின் எதிர்ப்புக்குப் பின்னர், சுற்றாடல் அமைச்சு இந்த
நடவடிக்கைக்குத் தாங்கள் அனுமதி வழங்கவில்லை என்றும், ஊடக அறிக்கைகள் மூலம்
அறிந்த பின்னரே அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக இடைநிறுத்துமாறு வனவிலங்கு
அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் அறிவித்தது.

இடைநிறுத்தம்

மனித-யானை மோதல் முகாமைத்துவத்திற்கான தேசியத் திட்டம் நடைமுறையில் உள்ளதால்,
யானைகளை பாரியளவில் விரட்டுவது அறிவியல் பூர்வமான தீர்வாகாது என்றும் அமைச்சு
சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த நவம்பர் 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தச் விசேட யானை விரட்டும்
நடவடிக்கையில், பல யானைகள், காப்பகத்துக்குள் விடப்பட்ட சிறிது நேரத்திலேயே
கிராமங்களுக்குத் திரும்பிவிட்டதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.

நவம்பர் 4ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், இரண்டு நாட்களுக்குள் சுமார் 22
யானைகள் திரும்பிவிட்டதை வனவிலங்கு அதிகாரி உறுதிப்படுத்தினார்.

மனு தாக்கல் 

இதற்கிடையில், சுற்றுச்சூழல் நீதிக்கான கேந்திர நிலையம் உள்ளிட்ட ஏழு
மனுதாரர்கள் நவம்பர் 3ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் அவசர இடைக்கால உத்தரவு
கோரி மேலதிக மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இந்த யானை விரட்டும் நடவடிக்கை, 2006ஆம் ஆண்டு காட்டு யானைகளின் பாதுகாப்பு
தொடர்பான தேசியக் கொள்கையை மீறுவதாகவும், இது யானைகளின் எண்ணிக்கை, சூழலியல்
சமநிலைக்கும் உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் மனுதாரர்கள்
வாதிட்டனர்.

விசாரணையின் இறுதித் தீர்ப்பு வரும் வரை, யானை விரட்டும் நடவடிக்கைக்குத் தடை
விதிக்கக் கோரி அவர்கள் உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டனர். 

NO COMMENTS

Exit mobile version