திருகோணமலையில், வடக்கு கிழக்கில் மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான
அடக்குமுறையினைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று (02) திருகோணமலை சிவன் கோவிலுக்கு
முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழ்ரகளின் காணி அபகரிப்பு, சைவத்
தமிழரின் தலங்களை அழித்தல், நாடு முழுவதும் இருக்கும் தமிழர் தொல்லியல்
சின்னங்களை அழித்தல் மற்றும் உருமாற்றம் செய்தல், இந்துக்களின் கோயில்களின்
வழிபாடுகளைத் சட்டத்திற்கு முரணானவகையில் தடுத்தல், ஆலயங்களுக்குச் சொந்தமான
நிலங்களை அபகரித்தல் எனும் அத்துமீறல்கள் தொடர்கதையாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒரே சட்டம்
ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் எனக்கூறிப் பெரும் பிரச்சாரம் செய்து வந்த
ஜேவிபி அரசு முன்னைய ஆட்சியாளர்கள் செய்த சட்டவிரோதப் பணிகளையே இன்னும்
தொடர்ந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த ஆட்சியாளர்களின் காலத்தில் உகந்தையில் புத்தர்சிலை நிறுவுதல்
ஒரு இன மத விரோதச் செயலாகும் என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சட்டவிரோத விகாரை
அத்துடன் நீண்டநாளாக தொடரும் சமய வழிபாட்டுத்தலங்களின் பிரச்சனைகளுக்கும் எந்த
தீர்வையும் தராது அடாவடியினைச் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கன்னியா சிவனாலய வழிபாட்டு முடக்கம்,
திருக்கோணேச்சர ஆலய காண்டாமணி நிறுவுவதற்கு அனுமதி மறுப்பு,
வெடுக்கு நாறியமலையில் வழிபாட்டுக்குத் தடை,
குருந்தூர் மலையில் தடையினைமீறிய புத்தவிகாரை
தையிட்டி சட்டவிரோத விகாரைப் பிணக்கைத் தீர்க்காமை
என பலநூறு சமயத் தலங்களின் பட்டியல் நீள்கின்றது என ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டவர்கள் கருத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
