Home இலங்கை சமூகம் மடு ஆலயம் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

மடு ஆலயம் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

0

மன்னார் – மடு ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு அதற்கு முன்னர் குறித்த பகுதியுடனான வீதியின் இரு மருங்கினையும் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக வன வளத் திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை இரண்டும் இதனுடன் முரண்படுமாயின் இராணுவத்தினர் இந்த பணியை மேற்கொள்வர் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரச திணைக்களங்களுக்கு இடையில் முரண்பாடு

ஆடி மாதம் மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இடம்பெறவுள்ளது. இந்த திருவிழாவிற்கு நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பெருமளவான மக்கள் வருகைத் தருவர்.

இந்தநிலையில், குறித்த வீதியின் இரு பகுதிகளையும் துப்பரவு செய்வதற்கு வீதி அதிகார சபையின் ஆலய நிர்வாகம் அனுமதி கோரியிருந்தது. இதனடிப்படையில் குறித்த கோரிக்கைக்கு அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், ஒரு வாரத்திற்குள் வீதி அதிகார சபை வழங்கிய அனுமதிக்கு எதிராக வீதி அதிகார சபைக்கு எதிராக வனவளத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

அத்துடன், மடு தேவாலயத்திடம் இருந்து 30 இலட்சம் ரூபா பணம் நட்ட ஈடாகவும் வன வளத் திணைக்களம் கேட்டிருந்தது.

மடு தேவாலய தரப்பினர் வீதியின் இரு பகுதிகளிலும் 15 மீற்றர் அளவிலான பகுதியை சீரமைப்பதற்கு அனுமதி கோரியிருந்தனர். எனினும், அனுமதி கோரியிருந்த பகுதியை விட சிறியளவிலான பகுதி மேலதிகமாக சென்று விட்டதாகவும், இதன் காரணமாகவே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது, மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு அதனை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைக்கு மிக விரைவில் அனுமதி கொடுக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கலந்தாலோசித்து முடிவு எடுக்குமாறும், அரச தினைக்களங்கள் மீதே மற்றுமொரு அரச திணைக்களம் வழக்கு தொடர்வது ஆரோக்கியமானது அல்ல என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த பகுதி மடு ஆலயத்திற்காகவே பாதுகாக்கப்படுவதாகவும், ஆலயத்தினரோடு இணைந்து குறித்த வீதி பகுதியையை தூய்மைப்படுத்திக் கொடுக்குமாறும் இராணுவத்தினருக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்போது, கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அதிகாரிகள் கைத்தட்டி ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு பாராட்டு தெரிவித்திருந்தனர். 

You may like this,

NO COMMENTS

Exit mobile version