Courtesy: uky(ஊகி)
தண்ணீரூற்று ஊற்றங்கரை கேணியின் கீழ் உள்ள வயல் நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் நெற்செய்கையினை அபிவிருத்தி செய்யும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஊற்றங்கரை சதுப்பு நிலத்தில் இருந்து பெறப்படும் நீரைக் கொண்டும் ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலய கேணியில் இருந்து கிடைக்கும் ஊற்று நீரைக்கொண்டும் இந்த வயல் நிலங்களில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய நீர்பாசன பாலம்
ஊற்றங்கரை சதுப்பு நில நீரை வயல் நிலங்களுக்கு மாற்றிக்கொள்ள உதவும் கட்டுப்படுத்தும் கட்டமைப்புக்களை இந்த சதுப்பு நில நீரோட்ட வழித்தடம் கொண்டுள்ளது.
அவை நீண்ட காலங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டு இருந்ததாக அப்பகுதி விவசாயிகள் இது தொடர்பில் குறிப்பிடுகின்றனர்.
இவற்றை மீளவும் புதிதாக கட்டமைத்து கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் அதன் ஒரு பகுதியாக புதிய கட்டமைப்புக்களை உருவாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
சிதைந்து போயுள்ள நீர்ப்பாசன பாலம் ஒன்று உடைக்கப்பட்டு மீளவும் புதிதாக கட்டமைக்கப்பட்டு வருகின்றதனை தற்போது அப்பகுதியில் அவதானிக்க முடிகின்றதும் நோக்கத்தக்கது.
புதிய அணுகு முறை
பரம்பரை பரம்பரையாக ஊற்றங்கரை கேணியின் கீழ் நெற் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் ஊற்று நீரை மட்டுமே நம்பி கோடைப்போக நெற் செய்கையில் ஈடுபட்டு வருவதனை அவதானிக்கலாம்.
வடக்கின் வன்னி பெருநிலப்பரப்பின் கிழங்கு பகுதியில் இது போல் பல இடங்களில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதானது புதிய அணுகு முறையாக இருக்கின்றது.
மழையினை நம்பி மேற்கொள்ளப்படும் மானாவாரி நெற்செய்கை மற்றும் குளங்களை நம்பி மேற்கொள்ளப்படும் நெற் செய்கை என்பன பரவலாக இருக்கின்றன.
தமிழர்களின் நுண்நோக்கு
ஊற்று நீரை நம்பி பாரம்பரியமாக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதானது புதுமையானது என சமூகவிட ஆய்வாளர் வரதன் குறிப்பிடுகின்றார்.
தாம் வாழும் சூழலின் இயற்கை அமைப்புக்களையும் இயற்கையின் போக்கையும் நுணுகி ஆராய்ந்து கொண்டு அதற்கேற்ப வாழும் இயல்பு தமிழர்களிடையே உணர்வோடு ஒன்றிப்போய் உள்ளது.
குமுழமுனையின் கொட்டுக்கிணற்று பிள்ளையார் கேணியில் இருந்து வரும் ஊற்று நீரைக் கொண்டு நெற்செய்கையினை மேற்கொள்வது போன்று ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயம் கேணியின் ஊற்று நீரும் நெற் செய்கைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றதனை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
குளங்களை அமைத்து மேற்கொள்ளப்படும் நெற் செய்கைகளுக்கு நிகராக ஊற்று நீரின் அமைவதை அறிந்து அதற்கேற்ப கேணி அமைத்து அதனைக் கொண்டு நெற் செய்கைக்கு திட்டமிடுதல் அவர்களது சிறந்த நுண் நோக்கிற்கு கிடைத்துள்ள சான்றுகளுள் ஒன்றாகும் என்று மேலும் குறிப்பிட்டார்.
ஊற்றங்கரை சதுப்பு நீர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்றுக்கு அண்மையில் உள்ள நந்திக்கடல் வரை பரந்துள்ள சதுப்பு நிலமே ஊற்றங்கரை சதுப்பு நிலமாக இங்கே பார்க்கப்படுகின்றது.
இந்த சதுப்பு நிலத்தொடரின் ஒரு பகுதி வற்றாப்பளை வரை நீண்டு செல்வதும் நோக்கத்தக்கது.
இந்த சதுப்பு நிலத்தின் பல பகுதிகளிலும் கிடைக்கும் நீரைக் கொண்டு நெற்செய்கைகள் முற்கொள்ளப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
அதிகமான உயிர்ப்பல்வகையினை கொண்டுள்ள நிலத்தொடராக இருப்பதோடு வெள்ள நீரேந்து நிலமாகவும் ஊற்றங்கரை சதுப்பு நிலம் இருக்கின்றது என உயர்தர புவியில் பாட ஆசிரியர் ஒருவருடன் சதுப்பு நிலங்கள் மற்றும் ஊற்றங்கரை சதுப்பு நிலம் சார்ந்து மேற்கொண்ட உரையாடலின் போது அவர் தெரிவித்திருந்தார்.