மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்கள், அமையதியான முறையிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு சித்தாண்டியில் மயிலத்தமடு, மாதவனை பகுதியில்
பெரும்பான்மையினத்தவர்களினால் முன்னெடுக்கப்படும் மேய்ச்சல் தரை அபகரிப்பினை
தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி தொடர்ந்து போராடிவரும் கால்நடை
பண்ணையாளர்கள் தாங்கள் போராட்டம் ஆரம்பித்து 300ஆவது நாளான இன்று (09.07.2024) இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பண்ணையாளர் சங்கத் தலைவர் நிமலன்
தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான
மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களான வேலன் சுவாமிகள், அருட்தந்தை
ஜெகதாஸ், எஸ்.சிவயோகநாதன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை லூத்
உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
பண்ணையாளர்கள் கவலை
தமது மேய்ச்சல் தரை காணிகள் அபகரிக்கப்பட்டு தமது வாழ்வாதாரம் முற்றாக
பறிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள அத்துமீறிய குடியேற்றக்காரர்களை
வெளியேற்றுமாறு வலியுறுத்தும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள அத்துமீறிய குடியேற்றக்காரர்களை வெளியேற்றுமாறு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மகாவலி அபிருத்தி அதிகாரசபை மற்றும்
மாவட்ட அரசாங்க அதிபருக்கு பணிப்புரைகளை வழங்கியபோதிலும் இதுவரையில் அவர்கள்
வெளியேற்றப்படவில்லை எனவும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் ஒரு கம்பு வெட்டினாலும் கைதுசெய்து வழக்கு தாக்கல் செய்யும்
அதிகாரிகள், அங்கு அத்துமீறிய செயற்பாடுகளை முன்னெடுப்போர் தொடர்பில் எந்த
நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் போராட்டக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.