யாழ். பருத்தித்துறை நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 12 உணவு
கையாளும் நிலையங்களுக்கு ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா தண்டப்பணம்
விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர் தலைமையில் நகர் பகுதியில்
உள்ள உணவு கையாளும் நிலையங்களில் திடீர் பரிசோதனை நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டன.
அதன்போது, சுகாதாரச் சீர்கேடுகளுடனும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத
வகையிலும் இயங்கிய 12 உணவு கையாளும் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு
அவற்றுக்கு எதிராகப் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டது.
தண்டப்பணம்
குறித்த வழக்குகள் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,
உரிமையாளர்கள் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை
ஏற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து, அவர்களை எச்சரித்த மன்று, அவர்களுக்கு ஒரு இலட்சத்து 35
ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது.