Home இலங்கை சமூகம் சம்மாந்துறை காவல்துறையினர் மீது மக்கள் கடும் குற்றச்சாட்டு

சம்மாந்துறை காவல்துறையினர் மீது மக்கள் கடும் குற்றச்சாட்டு

0

சம்மாந்துறை (Sammanthurai) காவல்துறையினர் மீது வீரமுனை பகுதி மக்களினால் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வீரமுனையில் அரச திணைக்களத்தின் செயற்பாடுகளை தடுப்பதற்கு சம்மாந்துறை காவல்துறையினர் துணைபோயுள்ளதாக வீரமுனை மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அம்பாறை (Ampara) மாவட்டத்தின் வீரமுனை பகுதியில் வீரமுனையின் பெயரைக்குறிக்கும் பெயர்ப்பலகையிடுவதை
சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் தடுத்து நிறுத்தியுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

சாதகமான முறை

அம்பாறை-கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பிரதான வீதியில்
வீரமுனை ஆண்டியர் சந்தியில் இந்த பெயர்பலகையினை இடும் செயற்பாடுகளை இன்று (20) வீதி
அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்திருந்தது.

இருப்பினும், அங்குவந்த சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள் வீதி அபிவிருத்தி
அதிகாரசபையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் சம்மாந்துறை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அங்குவந்த
சம்மாந்துறை காவல்துறையினர், பிரதேசசபை உறுப்பினர்களுக்கு சாதகமான முறையில்
செயற்பட்டதாக வீரமுனை மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பெயர்பலகை 

வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீதியில்
பெயர்பலகை நடுவதற்கு பிரதேசசபையிடம் எந்த அனுமதியும் பெறத்தேவையில்லாத நிலையில் இரண்டு பிரதேசசபை உறுப்பினர்கள்
இந்த செயற்பாடுகளை முன்னெடுத்தமை தொடர்பில் பிரதேச மக்கள் அதிர்ப்தி
தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே வீரமுனை வரவேற்பு கோபுரம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதும்
அதனை போலியான காரணங்கள் கூறி தடுத்தவர்கள் மீண்டும் அதேவேலையினை
செய்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சம்மாந்துறை பிரதேசசபையில் உள்ள சில உறுப்பினர்கள் தொடர்ச்சியாக வீரமுனையின்
அடையாளத்தினை இல்லாமல் செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகவும் இது
கண்டனத்திற்குரியது எனவும் அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்
கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version