கடந்தகால அமைச்சரவை
அனுமதியளித்த இந்த காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மன்னார் தீவினுள்
மேற்கொள்வதற்கு இடமளித்தால் அப்பிரதேசத்தின் நிலை மிக மோசமாகப் பாதிக்கப்படும்
என மக்கள் அஞ்சுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்
தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று(07) இடம்பெற்ற மன்னார்த்தீவு
காற்றாலை மின்னுற்பத்தித் திட்டப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலில்
பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் மீது
மன்னார் மக்களுக்கோ, மன்னாரைச் சார்ந்த பொது அமைப்புக்களுக்கோ எந்த
வெறுப்புக்களும் கிடையாது.
மக்களுடைய நிலைப்பாடு
பாதிப்புக்கள் ஏற்படுமென்பதாலேயே மன்னார் தீவினுள் இந்த காற்றாலை
மின்னுற்பத்திக் கோபுரங்களை அமைக்க வேண்டாமென மன்னார் மக்களும்,
பொது அமைப்புக்களும் கோருகின்றன.
இருப்பினும், பாதிப்புக்கள் எவையும் ஏற்படாதென்ற அடிப்படையில் மன்னார்த் தீவில்
காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைப்பதற்கு கடந்தகால அமச்சரவையால் அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
எனினும், மக்களுக்கு அதன்மீது நம்பிக்கையில்லை. மன்னார்த் தீவினுள் காற்றாலை
மின் உற்பத்திக் கோபுரங்கள் அமைக்கப்பட்டால் பாரிய பாதிப்புக்கள்
ஏற்படுமென்பது மக்களுடைய நிலைப்பாடாக இருக்கின்றது.
குண்டுத் தாக்குதல்கள்
குறிப்பாக கடந்த யுத்தகாலத்தில் அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயம் என ஒரு பகுதி
அறிவிப்பு செய்யப்படும். அந்த பகுதிக்குள் எமது மக்கள் நம்பி தஞ்சம் புகும்போது, அரசபடைகளால்
குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு எமது அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று
குவிக்கப்பட்டனர்.
இவ்வாறான பல சம்பவங்கள் கடந்த காலத்தில் இடம்பெற்றன.
இவ்வாறான சம்பவங்களால் அரசாங்கங்கள் மீது எமது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
இதனைப் போலவே மன்னார் தீவில் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைப்பதற்கு
பாதிப்பில்லையென கடந்த கால அரசாங்கத்தின் அமைச்சரவையால் அனுமதி
வழங்கப்பட்டாலும், அதன்மீது எமது மக்களுக்கு நம்பிக்கையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
