Home இலங்கை சமூகம் யாழ். மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை வழிமறித்த மக்கள் : நடுவீதியில் வெடித்த போராட்டம்

யாழ். மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை வழிமறித்த மக்கள் : நடுவீதியில் வெடித்த போராட்டம்

0

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாய் பகுதி மக்களும் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 

குறித்த போராட்டம் இன்றைய தினம் (29.06.2025) நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையினர் தமது எல்லைக்குள் சேகரிக்கும் மருத்துவ கழிவு, மலக்கழிவு, பிளாஸ்டிக் கழிவு, விலக்குக் கழிவு உட்பட பல கழிவுகளை மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மானிப்பாய், பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் உள்ள பகுதிக்குள் கொட்டுவதால், அதனை நிறுத்தும்படி கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வழிமறிக்கப்பட்ட வாகனங்கள் 

இதன்போது இன்றையதினம் மாநகர சபை கழிவுகளை ஏற்றிவந்த உழவியந்திரங்கள் பல வழிமறிக்கப்பட்டன. மலக் கழிவினை ஏற்றிவந்த மாநகர சபையின் வாகனம் ஒன்று உடனடியாக திரும்பிச் சென்றது.

வழமையாக குறித்த பகுதிக்குள் கொட்டப்படும் கழிவுகளுக்கு தீ வைக்கப்படுகிறது. இது குறித்து பல தடவைகள் செய்திகளும் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் நேற்றையதினமும் தீ மூட்டிய நிலையில் அந்த தீ இன்றுவரை எரிந்து கொண்டு இருப்பதுடன் வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கும் அண்டிய சூழலில் வசிக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எதிர்ப்பு நடவடிக்கை

குறித்த பகுதிக்கு நேற்றிரவு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வருகைதந்து பிரச்சினையை ஆராய்ந்ததாகவும், இதுவரை மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் களத்திற்கு வருகை தரவில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர்.

இன்றைய எதிர்ப்பு நடவடிக்கையின்போது யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் மயூரனுக்கும், கல்லூண்டாய் பகுதி மக்கள், மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களான உஷாந்தன், வாசன் ஆகியோருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

களத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாணம் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் மற்றும் மானிப்பாய் காவல்துறையினர்ஆகியோர் நிலைமைகளை சீருக்கு கொண்டுவர முயற்சித்தும் அது பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

செய்திகள் :  பு.கஜிந்தன் 

NO COMMENTS

Exit mobile version