Home இலங்கை சமூகம் வவுனியாவில் வீதியோரத்தில் கொட்டகைக்குள் வசிக்கும் மக்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

வவுனியாவில் வீதியோரத்தில் கொட்டகைக்குள் வசிக்கும் மக்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள பீடியாபாம் கிராம மக்கள் தங்களிற்கு பாதுகாப்பான இடத்தில் காணியினை தந்துதவுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், டிட்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, செட்டிகுளம், பீடியாபாம் மக்கள் தொடர்ந்தும் வீடுகளை விட்டு வீதியோரத்தில் கொட்டகைக்குள் வசித்து வருகின்றனர்.

பாதுகாப்பான இடத்தில் காணி

இந்த கிராமம், மல்வத்து ஓயா நீர் பாய்ந்து செல்லும் பாதை அருகே அமைந்துள்ளமையால் அந்த நீர் பெருக்கெடுத்து அம்மக்களின் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் மணல் மேடுகளாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 17 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி தற்காலிக கொட்டகைக்குள் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1975ம் ஆண்டு படித்த வாலிபர் திட்டத்தின் கீழ் குறித்த கிராமம் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற அனர்த்தத்தால் குறித்த கிராமமே நீரில் மூழ்கியதுடன், மக்களின் உடமைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பல வீடுகள் முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.

வாழ்வாதாரம் 

வயல்களும் முழுமையாக அழிவடைந்துள்ளதுடன், அவர்களின் வாழ்வாதாரத்திற்கான கால்நடைகளும் இறந்துள்ளன.

இந்நிலையில் இவ்வாறான வெள்ள அனர்த்ததால் தொடர்ந்தும் தமது உயிரையும் உடமையையும் பாதுகாக்க முடியாதுள்ளதாக தெரிவித்துள்ள இம்மக்கள், தங்களிற்கு வேறு ஒரு பாதுகாப்பான இடத்தில் காணியினை தந்துதவுமாறு கோருகின்றனர்.

கடந்த வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த கிராம மக்களை பாதுகாப்பான ஒரு இடத்தில் குடியமர்த்துவதற்கு ஏற்றவகையில் இடத்தினை தெரிவு செய்யுமாறு தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version