Home இலங்கை சமூகம் மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற முடியாது – வீதிக்கு இறங்கிய மக்கள்

மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற முடியாது – வீதிக்கு இறங்கிய மக்கள்

0

மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற முடியாது என தெரிவித்து நோர்வூர்ட் – ஸ்டொக்ஹோம் பகுதி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (17) தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மண்சரிவு ஆபத்து

நோர்வூர்ட் – ஸ்டொக்ஹோம் பகுதியில் மண்சரிவு ஆபத்து இருப்பதாக கூறி 50
குடும்பங்களை சேர்ந்த 307 பேர் அந்த பகுதியில் உள்ள பாரதிபுரம் தமிழ் மகா
வித்தியாலயத்தின் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நடவடிக்கையை நோர்வூர்ட் பிரதேச செயலாளருடன் இணைந்து தோட்ட நிர்வாக
முகாமையாளர் முன்னெடுத்திருந்தார். 

இவ்வாறான சூழலில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் நேற்றைய தினம் (16) தோட்ட
வீடுகள் மற்றும் தேயிலைத் தோட்டத்திற்குச் சென்று மண்ணை ஆய்வு செய்து,
தோட்டத்தில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இல்லை என்று பரிந்துரைத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆர்ப்பாட்டக்கார்கள் கூறுகையில், மோசமான காலநிலை சீர்கேட்டினால் நாங்கள் வசிக்கும் பகுதிகளில்
மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. மண்சரிவுகள் ஏற்படும் வகையிலான அபாயகரமான
வெடிப்புக்களும் உள்ளன.

கோரிக்கை

மேலும் நாம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் பாரிய
வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், மண்சரிவு ஏற்பட்டு குறித்த பிரதேசம்
அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலையில், மீண்டும் அந்த பகுதியில் குடியேற
எங்களால் முடியாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக தங்கள் பகுதிகள் தொடர்பில் தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) வழங்கியுள்ள அறிக்கையில் எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் நோர்வூர்ட் – ஸ்டொக்ஹோம் பகுதிக்கு உரித்தான பொறுப்பதிகாரிகள் உடனடியாக
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அல்லது பாதுகாப்பான இடத்தில்
குடியிருப்பாளர்களுக்கு வீட்டுத்திட்டத்தை அமைத்து கொடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version