மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் கைது
செய்யப்பட்ட மட்டு மாநகர சபையின் முன்னாள் முதல்வரின் கணவரும் பிள்ளையானின் மொழி
பெயர்ப்பாளருமான நபரை 3 நாள் காவல்துறை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டு
நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று சனிக்கிழமை (8) அனுமதியளித்துள்ளார்
இது பற்றி தெரியவருவதாவது
காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து ஊழல் ஒழிப்பு மற்றும் போதை
ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (07) இரவு முதலியார்
வீதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட போது அங்கு வியாபாரத்தில் ஈடுபட்ட
பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்; சி.சந்திரகாந்தனின்
மொழி பெயர்ப்பாளரும், மட்டு மாநகர சபை முன்னாள் முதல்வரின் கணவருமான நபரை 5 கிராம் ஐஸ்
போதை பொருளுடன் கைது செய்தனர்.
மற்றுமொருவர் கைது
இதனை தொடர்ந்து அதிகாரி வீதியில் உள்ள வீடு ஒன்றில் தச்சு வேலையில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த கூழாவடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை 250 மில்லிகிராம் ஐஸ் போதை
பொருளுடன் கைது செய்தனர்
நீதவானின் உத்தரவு
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது கைது செய்யப்பட்ட
வியாபாரியை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை காவல்துறை தடுப்புக் காவலில் வைத்து
விசாரணை செய்ய நீதவான் அனுமதித்தார்
அதனை தொடர்ந்து 250 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட தச்சு
தொழிலாளியை பிணையில் விடுவித்து உத்தரவு பிறப்பித்தார்.
