Home இலங்கை சமூகம் அரச நிதி மோசடி: காவல்துறை கான்ஸ்டபிளுக்கு விடுக்கப்பட்ட உத்தரவு!

அரச நிதி மோசடி: காவல்துறை கான்ஸ்டபிளுக்கு விடுக்கப்பட்ட உத்தரவு!

0

காத்தான்குடி காவல்நிலைய பொறுப்பதிகாரியின் வாகன சாரதியான காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி காவல்நிலையத்தில் வாகனத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் (வவுச்சர் ) பற்றுச்சீட்டை எரிபொருள் நிலையத்தில் வழங்கி 6 ஆயிரத்து 600 ரூபா அரச பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் அவர் நேற்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த காவல்நிலையத்தின் வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக காவல்நிலையத்தில் வவுச்சரை பெற்றுக் கொண்டு அதனை நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வழங்கி அதற்கான எரிபொருனை வாகனங்களுக்கு நிரப்பி செல்வது வழமையானது.

விசாரணை

எனினும், பொறுப்பதிகாரியின் ஜீப்வண்டிக்கும் காவல்நிலையத்திலுள்ள மின்பிறப்பாக்கிக்கான டீசலுக்கான (பவுச்சர்) அனுமதி சீட்டை குறித்த சாரதி பெற்றுக் கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு சென்று அங்கு 12 ஆயிரத்து 400 ரூபாவுக்கு ஜீப்வண்டிக்கான டீசலை நிரப்பிக் கொண்டு மின்பிறப்பாக்கிக்கான 6 ஆயிரத்து 600 ரூபா பெறுமதியான டீசலை பெற்றுக் கொள்ளாமல் அதற்கான பணத்தை எரிபொருள் நிலையத்தில் வாங்கி எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

இந்த மோசடி தொடர்பாக புலனாய்வு பிரிவினர், காவல்துறை உயர் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து இது தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் விசாரணை முன்னெடுத்து வந்த நிலையில் அரச பணத்தை மோசடி செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு

இதனையடுத்து சம்பவதினமான நேற்று இந்த மோசடி தொடர்பாக காவல்துறை சாரதியாக கடமையாற்றிவரும் 38 வயதுடையவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) முன்னிலைப்படுத்தியபோது, அவரை எதிர்வரும் 27 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version