அம்பாறை- காரைதீவு பகுதியில் கைத்துப்பாக்கி திடீரென வெடித்ததில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அம்பாறை- காரைதீவு பொலிஸ் நிலையத்தில் நேற்று (17)
இரவு இடம்பெற்றுள்ளது.
வழமைபோன்று கடமை நிமிர்த்தம் துப்பாக்கியை பெற்றுக்கொள்வதற்கு ஆயுத
களஞ்சியத்திற்கு பொறுப்பான நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரிடம் மற்றுமொரு
பொலிஸ் உத்தியோகத்தர் பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றினை பெற சென்றவேளை இச்சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இதன் போது ஆயுத களஞ்சியத்திற்கு பொறுப்பான நியமிக்கப்பட்ட பொலிஸ்
உத்தியோகத்தர் குறித்த கைத்துப்பாக்கியை பரிசீலனை செய்வதற்காக மேசையில் வைத்த
வேளை திடிரென கைத்துப்பாக்கி தவறி வெடித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில்
தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர் 39 வயதுடைய நல்லதம்பி நித்தியானந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.
இந்தநிலையில், அவரது வலது காலில் துப்பாக்கி ரவை துளைத்துச் சென்ற நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
