Home இலங்கை சமூகம் தையிட்டி குறித்து பகிரப்பட்ட சர்ச்சைக்குரிய பதிவு : விசாரணைக்கு அழைக்கப்பட்ட யாழ் ஊடகவியலாளர்கள்

தையிட்டி குறித்து பகிரப்பட்ட சர்ச்சைக்குரிய பதிவு : விசாரணைக்கு அழைக்கப்பட்ட யாழ் ஊடகவியலாளர்கள்

0

யாழில் (Jaffna) இரண்டு ஊடகவியலாளர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் பலாலி காவல்துறையினர் சுமார் ஆறு மணி நேரம் குறித்த தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் என நாடாளுமன்ற உறுப்பினர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் (Gajendrakumar Ponnambalam) பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள்
பகிரப்பட்டன.

பதிவு போலியானது

குறித்த பதிவுகள் பகிரப்பட்டு சில மணிநேரங்களில் நாடாளுமன்ற
உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த பதிவு போலியானது என தனது சமூக
ஊடகங்களில் பதிவிட்டதுடன் , ஊடக சந்திப்பொன்றினையும் நடாத்தி அது போலியான
விளம்பரங்கள் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் விகாரையை இடிக்க வாரீர் என போலி முகநூல்களில்
விளம்பரப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு
எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பலாலி காவல்துறையினர் வழக்கு தாக்கல்
செய்துள்ளனர்.

இதையடுத்து, யாழ்.பிராந்திய ஊடகவியலாளர்களான கந்தசாமி பரதன் மற்றும் தம்பித்துரை
பிரதீபன் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்கள், வாக்கு மூலம் பெறுவதற்காக பலாலி
காவல் நிலையத்தின் உப காவல்துறை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

உயர் பாதுகாப்பு

இதன்பின், ஊடகவியலாளர்களை
அங்கிருந்து உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி காவல் நிலையத்திற்கு
அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இரண்டு ஊடகவியலாளர்களின் தொலைபேசிகளை பெற்று சோதனையிட்டதுடன் அவர்களிடம்
சுமார் ஆறு மணி நேரம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை
பெற்றுக்கொண்டனர் .

பின்னர் , குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் தாம்
அழைக்கும் போது நீதிமன்றுக்கு சமூகமளிக்க வேண்டும் எனும் நிபந்தனையுடன்
இருவரையும் காவல்துறையினர் விடுவித்துள்ளனர்.

அதேவேளை தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த முன்னாள்
உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் , நல்லூர் பிரதேச சபையின் முன்னாள்
உறுப்பினர் வாசுகி சுதாகரன் உள்ளிட்டோரை பலாலி காவல்துறையினர் வாக்கு மூலம் வழங்க பலாலி காவல் நிலையத்தின் உப பிரிவுக்கு அழைத்து
சுமார் இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்த பின்னரே வாக்கு மூலங்களை பெற்று
இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version