நீர்கொழும்பில், இணையத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் நிதி கொடுக்கல் வாங்கல்களை நடத்தியதாக கூறப்படும், இரண்டு நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு 30 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று (24.06.2024) இரவு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில், சீனா, பிலிப்பைன்ஸ், மாலைத்தீவு, பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளும் அடங்குவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிதி மோசடி
பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக, இவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 5000 ரூபாய் முதலீடு செய்தால் 3000 ரூபாய் இலாபம் கிடைக்கும் என்று கூறி அதிக அளவில் பணம் வசூலித்து இவர்கள் மோசடியில் ஈடுபட்டதாக அதிகாரி கூறியுள்ளார்.
சுற்றிவளைக்கப்பட்ட இரண்டு வீடுகளிலும் இருந்து, பெருமளவிலான தொடர்பாடல் உபகரணங்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைப்பற்றியுள்ளது.
இலங்கையில் தங்கியிருக்கும் இந்தக் குழுவினர், ஏனைய நாடுகளுக்கும் இந்த மோசடி திட்டத்கை விரிவுப்படுத்தியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
திடீர் சுற்றிவளைப்பு
இந்தநிலையில், குறித்த வெளிநாட்டவர்கள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மங்கள தெஹிதெனிய குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் பலகோடி ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும், அவ்வாறான மற்றுமொரு இடத்தில் சோதனை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.