அறுகம்பை பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
எனினும், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.
அறுகம்பை சுற்றுலாப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அங்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் கிடைத்த தகவல்
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களும் பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அறுகம்பை மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் அலைச் சறுக்கு விளையாட்டுக்களில் இஸ்ரேலியர்கள் அதிகமாக ஈடுபடுவதாகவும், அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்
இதேவேளை, கொழும்பு அல்லது வேறு எந்த பிரதேசங்களிலும் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறவுள்ளதாக எவ்வித புலனாய்வுத் தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அறுகம்பை கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதனை தவிர்க்குமாறு அமெரிக்கா தமது நாட்டுப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த அச்சுறுத்தல் இருப்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கிழக்கு இலங்கையின் அறுகம்பை தொடர்பில் இவ்வாறான பயணக் கட்டுப்பாட்டை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.