Home இலங்கை அரசியல் குற்றவாளிகளுக்கு அரசியல் அடைக்கலம் வழங்காத ஆட்சியை உருவாக்கியுள்ளோம்: ஜனாதிபதி தெரிவிப்பு

குற்றவாளிகளுக்கு அரசியல் அடைக்கலம் வழங்காத ஆட்சியை உருவாக்கியுள்ளோம்: ஜனாதிபதி தெரிவிப்பு

0

போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு தாய்நாடு, தேசம் மற்றும் பிள்ளைகள் பலியாகாமல்
தடுப்பது தனது ஒரே நோக்கம் என்றும், எந்தவொரு குற்றவாளிக்கும் அல்லது
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் எவருக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத
ஓர் அரசாங்கம் இன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய
செயற்பாட்டின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட தென் மாகாண நிகழ்ச்சி நேற்று பிற்பகல் தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள், குற்றச்செயல்கள் என்பவற்றுடன் பிணைந்த கருப்புப் பொருளாதாரம்
எமது நாட்டில் எந்த விதத்திலும் அபிவிருத்தி, அமைதி, சுபீட்சம் என்பவற்றை
கொண்டுவராது. இந்த பேரழிவிலிருந்து எமது சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும்.
இந்த பேரழிவு கிராமங்கள், நகரங்கள், குடும்பக் கட்டமைப்பை எந்தளவு
ஆக்கிரமித்துள்ளது என்பதை நாம் அறிவோம்.

போதைப்பொருளுக்கு அடிமை

குடும்பத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் வளர்ந்த பிள்ளை இந்த போதைப்பொருளுக்கு அடிமையாகி மோசமான நபராக மாறியிருப்பார். எதிர்பார்ப்புடன்
வளர்த்த பிள்ளை சமூகத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் செயற்பாட்டாளராக
மாறியிருப்பார். இதனை எந்த பெற்றோரினால் தாங்க முடியும்?

தாம் பாலூட்டி வளர்த்த பிள்ளைக்கு இவ்வாறான நிலைமை ஏற்படுவதை எந்த தாயும்
எதிர்பார்க்க மாட்டார்.

ஆனால் இலட்சக்கணக்கான பிள்ளைகள் இந்த பேரழிவில்
சிக்கியுள்ளனர். இது அந்த முழு குடும்பத்தையும் வீழ்ச்சியடைய செய்துள்ளது.

இந்தப் பேரழிவினால் கிராமங்கள் பீதியடைந்துள்ளன. இதனால் பிள்ளைகளை தொழிலுக்கு
அனுப்ப, பகுதி நேர வகுப்புக்கு அனுப்ப, விளையாடுவதற்கு அனுப்ப, சுற்றுலா
அனுப்புவதற்குக் கூடப் பெற்றோர் பயப்படுகின்றனர்.

அதனால் தான் இந்த பேரழிவைத்
தோற்கடிக்க வேண்டும்.

போதைப்பொருளுக்கு அடிமையாகும் பிள்ளை அடுத்து மோசடிகளில் ஈடுபட
ஆரம்பிக்கின்றார். திருடராக, மோசடிக்காரராக அவர் மாறுகின்றார். போதைப்பொருள்
வலையமைப்புக்கு இறையாகி பணத்துக்காகக் கொலை செய்ய ஆரம்பிக்கின்றார்.

பணப்பரிமாற்றம்

கைதான 90
வீதத்திற்கும் அதிகமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களாக உள்ளனர்.

இது எமது நாட்டின் எதிர்காலத்தை முழுமையாக விழுங்கியுள்ளது. போதைப்பொருள் ஊடாக
பெருமளவு பணப்பரிமாற்றம் இடம்பெறுகின்றது.

எந்த வர்த்தகத்தின் ஊடாகவும் பல நூறு
வருடங்களில் ஈட்ட முடியாத பணத்தை ஒரு படகின் ஊடாக ஈட்டுகின்றனர்.

இந்த பணம் பல்வேறு கருப்பு வர்த்தகங்களில் ஈடுபடுத்தப்படுகின்றது. அந்த பணத்தால் அரச பொறிமுறையில் உள்ள பலவீனமானவர்களை வாங்க முடிகின்றது.
சுற்றிவளைப்புகள் மற்றும் தங்களுக்கு எதிராக அச்சுறுத்தல்களை தடுக்க இவ்வாறு
செய்கின்றனர்.

சில பொலிஸ் நிலையங்கள் இதற்கு எதிராகச் செயற்படுவதில்லை எனச் சில கிராமங்களில்
குற்றம் சாட்டப்படுகின்றது. நாம் அனைத்து பொலிஸாரையும் அவ்வாறு கூறுவில்லை.
சில சமயங்களில் பயமுறுத்தப்பட்டுள்ளனர். போதைப்பொருள் வர்த்தகர்களுக்குச்
சிறையில் சிறந்த வசதிகளை அளிக்காவிட்டால் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும்
குடும்பத்தினர் அச்சுறுத்தப்படுகின்றனர்.

அரச பொறிமுறையை அச்சுறுத்தி தமது பணியை மேற்கொள்ளும் போக்கு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version