E8 – விசா முறையின் கீழ் கொரியாவில் பணிக்கு செல்ல எதிர்பார்த்துள்ள மக்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாக முன்னெடுத்த போராட்டத்தில் பொலிஸாருடன் ஏற்பட்ட முறுகல் நிலையால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
தென்கொரியாவிற்கு E8 – விசா முறையின் கீழ் பணிக்கு செல்லவிருப்போர், நேற்று (23) காலை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்காலிக கூடாரங்கள்
குறித்த மக்களுக்கு கொரியாவில் பணிபுரிய விசா கிடைத்துள்ள நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அலட்சியத்தால் தங்களுக்கு கொரியாவுக்கு பயணிக்க முடியாமல் போயுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த மக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அருகே உள்ள நடைபாதையில் தற்காலிக கூடாரங்களை அமைக்க முயன்றபோது, அங்கு வந்த பொலிஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதுள்ள அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் முறையான நடைமுறையைப் பயன்படுத்தி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமையினால் குறித்த நபர்களை E8 – விசா முறையின் கீழ் பதிவு செய்வது கேள்விக்குறியாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விடத்திலேயே இன்று காலை வரை இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.