Home இலங்கை சமூகம் பெருந்தோட்டக் கம்பனிகளின் அராஜக போக்கை கண்டித்து மலையக நகரங்களில் போராட்டம்

பெருந்தோட்டக் கம்பனிகளின் அராஜக போக்கை கண்டித்து மலையக நகரங்களில் போராட்டம்

0

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 1700
ரூபா வழங்குமாறு வலியுறுத்தியும், பெருந்தோட்டக் கம்பனிகளின் அராஜக போக்கை
கண்டித்தும் மலையக நகரங்களில் இன்று (21.04.2024) போராட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு
சிவில் அமைப்புகள் மற்றும் நகர வர்த்தகர்கள் தரப்பில் இருந்தும் பேராதரவு
வழங்கப்பட்டது.

இதன்போது பெரும்பாலான நகர் பகுதிகளில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டன.

நுவரெலியா மாவட்டத்தில்
ஹட்டன், கொட்டகலை, டிக்கோயா, பொகவந்தலாவை, மஸ்கெலியா, டயகம, அக்கரப்பத்தனை,
நானுஓயா, இராகலை உள்ளிட்ட நகரங்களில் இ.தொ.காவின் ஏற்பாட்டில் சம்பள
உயர்வுக்கான அழுத்தம் கொடுக்கும் போராட்டங்கள் இடம்பெற்றன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700
ரூபாவை வழங்குமாறு அரசாங்கம் கம்பனிகளிடம் கோரிக்கை விடுத்ததுடன்
அமைச்சரவையிலும் இதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது எனினும் கம்பனிகள் 1700
ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென தொடர்ச்சியாக கூறிவருவதுடன்
அரசாங்கத்தின் தீர்மானத்தையும் ஏற்க மறுத்து வருகின்றன.

சம்பள விடயத்தில் இழுத்தடிப்பு

இது தொடர்பில் தொழில் அமைச்சு, முதலாளிமார் சம்மேளனம் மற்றும் இலங்கை
தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையில் நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுகளும்
தோல்வியிலேயே முடிந்தது.

இதேவேளை நானுஓயா நகர வர்த்தகர்கள் தங்களின் வர்த்தக நிலையங்களை இரு மணி
நேரம் அடைத்து இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் பெருமளவான
தொழிலாளர்களும் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களும்
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

அத்துடன் தொழிலாளர்களின் கோரிக்கைகளை புறக்கணிக்காதீர்,
சம்பள விடயத்தில் இழுத்தடிப்பு வேண்டாம் , தொழிலாளர்களை ஏமாற்றாதீர்கள் போன்ற
அரசுக்கு எதிரான வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை
எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நானுஓயா பொலிஸார் இப்போராட்டத்திற்கான பாதுகாப்பினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 

மேலதிக தகவல் – செ.திவாகரன்

NO COMMENTS

Exit mobile version