செம்மணிப் படுகொலைக்கு நீதி வேண்டி செம்மணி அணையா தீபம் முற்றத்தில் அடையாளப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை மெதடிஸ்த திருச்சபையினரின் ஏற்பாட்டில் இன்று (28.10.2025) குறித்த போராட்டம் இடம்பெற்றது.
நாட்டில் இருக்கும் இனங்களுக்கிடையிலான பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட தெரியாத இன்றைய அரசாங்கம் தீர்வை தரும் என நம்புவது சாத்தியமற்ற ஒன்று என இலங்கை திருச்சபையின் யாழ். குரு முதல்வர் செல்வன் இதன்போது தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்திடம் நீதி
இதன்போது ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “செம்மணி என்பது இனப்படுகொலை நடத்தப்பட்டதன் அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு சாட்சியுமாகும்.
இந்த சாட்சியமே இன்று இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றது என்பதையும் அதற்கான நீதி வேண்டும் என்பதையும் சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லுகின்றது.
எனவே அதற்கான வலுப்படுத்தலை நாம் ஒவ்வொருவரும் முன்னெடுப்பது அவசியமாகும். அதற்காகவே மெதடிஸ்த திருச்சபை இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இதேவேளை, கொல்லப்பட்டவர்களின் குருதிகள் தமக்கான நீதியை பெற்றுத்தாருங்கள் என எங்கள் ஒவ்வொருவரிடமும் ஓலமிட்டவண்ணம் இருக்கின்றன.
அந்த ஓலங்களுக்கு நாம் நீதியை இலங்கையில் இந்த அரசிடமிருந்தும் எதிர்பார்க்க முடியாது.
எனவே சர்வதேசத்திடம் இதற்கான நீதியை கோரி நிற்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.
மன்னார் காற்றாலை
இதேவேளை மன்னார் காற்றலை மின் உற்பத்தி ஆலை விவகாரம் மக்களின் நலன்களுடன் அவர்களது
கருத்துக்களுக்கும் முதன்மை கொடுக்கப்பட வேண்டும் என இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக் குரு கந்தையா ஜெகதாஸ் தெரிவித்துள்ளார்.
மன்னார் ஆயருடன் ஜனாதிபதி சந்தித்த போதும் இதையே கூறியிருந்தார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று மன்னார் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுள் ஒன்றாக இந்த காற்றலை விவகாரம்
மாறியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
https://www.youtube.com/embed/c2kdiiv2eS0
