Home இலங்கை சமூகம் வீதி புனரமைக்க கோரி வல்வெட்டித்துறையில் மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம்

வீதி புனரமைக்க கோரி வல்வெட்டித்துறையில் மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம்

0

யுத்தம் நிறைவடைந்த இத்தனை வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்தவொரு
அரசாங்கத்தினாலும் புனரமைக்கப்படாத பிரதான வீதியினால் பாதிக்கப்பட்டுள்ள வல்வெட்டித்துறை பிரதேச தமிழர்கள், குறித்த வீதியை விரைவில் புதுப்பிக்குமாறு கோரி
போராட்டம் நடத்தியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறப்பிடம் வல்வெட்டித்துறை என்பதால்
அந்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீதியை சீரமைக்க எந்தவொரு அரசாங்கமும் நடவடிக்கை
எடுக்கவில்லை என வல்வெட்டித்துறை நகரசபைக்கு முன்பாக வார இறுதியில்
முன்னெடுக்கப்பட்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட
பிரதேசவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த வீதியின் புனரமைப்பு முந்தைய அனைத்து அரசாங்கங்களாலும்
புறக்கணிக்கப்பட்டதாக வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவர்
இராமச்சந்திரன் சுரேன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

தொடர் புறக்கணிப்பு 

“கடந்த கால அரசாங்கங்கள் அடுத்த வருடம் என தொடர்ச்சியாக திட்டமிட்டு செயற்பட்டமையால் இந்த வீதி இப்படி இருக்கின்றது.

விடுதலை புலிகளின் தலைவர்
பிறந்த மண் என்ற காரணத்திற்காக, AB தர வீதிகளில் இலங்கையில் புனரமைக்கப்படாமல்
இருக்கும் ஒரே வீதி இது என்று தான் நான் நினைக்கின்றேன். கடந்த கால இனவாத
அரசாங்கங்களால் கைவிடப்பட்ட இந்த வீதியை புனரமைக்க வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார். 

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் பொன்னாலையில் இருந்து பருத்தித்துறை வரையான வீதி
புதுப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள்,
தொண்டமானாறு தொடக்கம் பருத்தித்துறை வரையான 12 கிலோ மீற்றர் தூரத்தையாவது
உடனடியாக புனரமைக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

மூன்று தசாப்தங்களாக வடக்கில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில்,
வடக்கில் 90 வீதமான வீதிகளை அரசாங்கம் புதுப்பித்துள்ளதாகத் தெரிவிக்கும்
பிரதேசவாசிகள், நோயாளிகளை சரியான நேரத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல
முடியாமல் வழியில் உயிரிழந்தமைக்கு இவ்வீதி புதுப்பிக்கப்படாமையே காரணமாகும்
என வலியுறுத்தியுள்ளனர்.

“எங்கள் வீதி எமக்கு”, “தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த ஊர் என்பதால் இனவாத அரசால்
நிராகரிக்கப்பட்டதா?”, “புதிய அரசே எமது வீதியை புனரமைத்துத் தா”, “அவசர
சிகிச்சைக்காக செல்லும் போதே ஆயுள் முடிகிறதே” போன்ற வாசகங்களைத் தாங்கிய
பதாதைகளை ஏந்தியவாறு அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்
மக்கள், வல்வெட்டித்துறை மாநகர சபை உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த திணைக்களத்திடம்
கையளிப்பதற்கான மனு ஒன்றிலும் பொதுமக்களிடம் கைழுத்துப் பெற்றுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version