Courtesy: Sivaa Mayuri
இலங்கையின் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சஜித் பிரேமதாச வழங்கிய உறுதிமொழிக்கு எதிராக சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டதை நடத்தியுள்ளன.
இலங்கைப் பிரிவினைக்கு எதிரான கூட்டமைப்பு’ என்று தம்மை அழைத்துக் கொண்டு, தேசியக் கொடிகளை ஏந்திய குழு, இன்று காலை, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்று, 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டது.
பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்கள் மற்றும் நீதித்துறை அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கு எதிராக ஒரு அறிக்கையை கையளிப்பதற்காக தாம் வந்துள்ளதாகவும், சஜித் பிரேமதாசஅலுவலகத்துக்குள் இருந்தால், வெளியே வரவேண்டும் என்று மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் இயக்கத்தின் தலைவர் ஜமுனி கமந்த துசார இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
வடக்கின் வாக்குகள்
முதலில், வடக்கு மற்றும் கிழக்கைப் பிரித்து விட்டுக் கொடுப்பதன் மூலம் நாம் என்ன சாதிக்கப் போகிறோம் என்பதைச் சொல்லுங்கள் என்று மற்றொரு எதிர்ப்பாளர் சத்தமிட்டார்.
வடக்கின் வாக்குகள் இந்தத் தேர்தலில் தீர்க்கமானதாக இருக்கும்.
எனவே அந்த வாக்குகளைப் பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித், அனுரகுமார திஸாநாயக்க ஆகிய அனைவரும் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாகக கூறுகின்றனர்.
எனினும் நாட்டை ஒன்பது துண்டுகளாக பிரிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று இதன்போது எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.