இந்தியாவிலிருந்து(India) சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த
மஞ்சள், பீடி இலைகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் ஆகியவற்றை
நிகாவெரெட்டிய பிராந்திய பொலிஸ் ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
வடமேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத்
தகவலுக்கமைய நிகாவெரெட்டிய பிராந்திய பொலிஸ் ஊழல் ஒழிப்புப் பிரிவினர் நேற்று (01)
பிற்பகல் புத்தளம் நகர மத்தியில் அமைந்துள்ள பழங்கள் மற்றும்
மரமுந்திரிகை களஞ்சிய சாலையை முற்றுகையிட்டு சோதனை நடாத்தியுள்ளனர்.
சோதனை நடவடிக்கை
இதன்போது, அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார்
1400 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள், மற்றும் 88 கிலோ கிராம் பீடி இலைகள்
கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், களஞ்சியசாலையினுல் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்று சோதனைக்குற்படுத்திய போது சூட்சமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 பொதிகள்
அடங்கிய 50,000 வெளிநாட்டு சிகரெட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாலாவி மற்றும் கலேவெல பகுதிகளைச் சேர்ந்த இருவர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்கள் 75 இலட்சம்
ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு தயாராக இருந்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக
நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள் இந்தியாவிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி
சட்டவிரோதமாக படகு மூலம் கொண்டுவரப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட மஞ்சள், பீடி
இலைகள், சிகரெட்டுக்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஆகியவற்றை
புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.