Home இலங்கை அரசியல் இலங்கையில் தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும்!ராமதாஸ்

இலங்கையில் தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும்!ராமதாஸ்

0

இலங்கையில் ஒற்றாட்சி அரசியல் அமைப்பு விதியை (ஏக்கிய இராச்சிய அரசியல்
யாப்பை) நிராகரித்து தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல்
முறைமை உருவாக வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர்
மருத்துவர் ச.இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஈழத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் பொ.ஐங்கரநேசன், செ.கஜேந்திரன்,
த.சுரேஸ், ந.காண்டீபன், க.சுகாஸ் ஆகிய தமிழ்த் தேசியப் பேரவையின் முக்கிய
பிரமுகர்கள் 20.12.2025 அன்று எனது இல்லத்திற்கு வந்து என்னைச் நேரில்
சந்தித்திருந்தார்கள்.

இன அழிப்பு

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போர் கடந்த 2009 மே மாதம்
நிறைவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தொடர்ந்தும் தமிழர் தேசத்தில்
இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் கட்டமைப்புகள் இன அழிப்பை தொடர்ந்து செய்து
வருவதை தெளிவுபடுத்தினார்கள்.

இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைமையை
எண்ணிப்பார்க்கும் போது வேதனைக்கு உரியதாக உள்ளது. இந்நிலை இலங்கையில்
தொடர்வதற்கு தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்படாததே காரணமாகும்.

1987-ஆம் ஆண்டு இலங்கை, இந்திய ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு அதிகாரப்
பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை ஏற்படுத்தபட்டது. இந்த ஒப்பந்தத்தை
ஒட்டி இதுவரை அதிகாரங்களை மாகாணங்களுக்கு இலங்கை அரசு வழங்கவில்லை.

ஒற்றையாட்சி அரசியல் விதியில் 13-ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதனால் 38
ஆண்டுகளாக தமிழர்களுக்கு எந்த அதிகாரமும் கிடைக்கவில்லை. அது மட்டுமன்றி
தமிழர்கள் மீதான இன அழிப்பையும் தடுக்க முடியவில்லை.

13-ஆம் திருத்தத்தினை
நடைமுறைப்படுத்துமாறு இந்திய ஒன்றிய அரசு பல முறை இலங்கை அரசாங்கங்களை
வலியுறுத்தி வந்துள்ளபோதும் ஒற்றையாட்சி முறைமைக்குள் அதிகாரங்கள் எதனையும்
வழங்க முடியாதென இலங்கை உச்ச நீதிமன்றம் 32 தடவைகள் தீர்ப்பளித்தள்ளது.
இதனால் இந்தியாவின் கோரிக்கைகளும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஒற்றையாட்சி முறைமை

எனவே ஒற்றையாட்சி முறைமையின் கீழ் ஒருபோதும் தமிழர்களுக்கு விடிவு
கிடைக்காது. தமிழர்களின் இந்நிலையை‌ போக்க தற்போது இலங்கையில் தொடரும்
அரசியல் கட்டமைப்பை மாற்ற வேண்டும்.

இன அழிப்பிலிருந்து தமிழர் தேசத்தை
பாதுகாக்க, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த் தேசத்தின் தனித்துவமான
இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி
முறைமை உருவாக்கப்படுவதே ஒரே வழியாகும்.

தமிழர்களுக்கு தீர்வு வழங்குகின்றோம் என்ற போர்வையில் கடந்த 2015 – 2019
காலப்பகுதியில் பதவி வகித்த அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட ஒற்றாட்சி அரசியல்
விதியை (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை) தற்போது பதவியில் உள்ள அனுரகுமார
அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு விதியை கொண்டு வந்து நிறைவேற்றவுள்ளது.

அந்த
அரசியல் அமைப்பு விதி வரைபானது கடந்த 76 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது போன்ற
சிங்கள பௌத்த பெரும்பான்மையினரது கைகளில் அதிகாரத்தை வழங்கும் ஒருமித்த
அரசியல் அமைப்பு விதி.

எனவே அத்தகைய ஓர் அரசியல் சட்டம் கொண்டு நிறைவேற்றுவதற்கு எடுக்கும்
முயற்சிகளை இந்திய ஒன்றிய அரசு தடுத்து நிறுத்திட மேலே குறிப்பிட்டது போன்று
கூட்டாட்சி அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டால் மாத்திரமே இலங்கை இந்திய
ஒப்பந்தத்தின் நோக்கமும் நிறைவேறும். இதுவே பாட்டாளி மக்கள் கட்சியின்
உறுதியான நிலைப்பாடாகவும் உள்ளது என்றுள்ளது.

NO COMMENTS

Exit mobile version