ரெலோவின் தலைவர் அடைக்கலநாதனைப் பொதுவெளியில் விமர்சித்த உறுப்பினர்
ஒருவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
திருகோணமலையைச் சேர்ந்த ரெலோ உறுப்பினரான
பாக்கியராசா ஹான்ஸ்குமாரனே இவ்வாறு கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்
அடைக்கலநாதனைப் பொதுவெளியில் படுமோசமாக விமர்சித்துக் குரல் பதிவுகளை
வெளியிட்டமைக்காக அவர் இவ்வாறு கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
அடிப்படை உறுப்புரிமை
இவர் கட்சித் தலைமையையும் தலைமைக் குழு உறுப்பினர்கள் சிலரையையும் கேவலமான
முறையில் விமர்சித்துப் பொதுவெளியில் குரல் பதிவுகளை வெளியிட்டமைக்காக
முதற்கட்ட ஒழுக்காற்று நடவடிக்கையாக அடிப்படை உறுப்புரிமையில் இருந்து
தற்காலிகமாக நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் கோவிந்தன்
கருணாகரம் (ஜனா) மேற்படி நபருக்கு நேற்று (15) கடிதம் மூலம் அறிவித்தல்
விடுத்துள்ளார்.
குறித்த கடித்தத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கட்சியின் தலைவர் குறித்து கடந்த சில வாரங்களாகப் பொது வெளியில் பல்வேறு
விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இது பற்றி தலைமைக் குழு
நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வேளையில் உங்களது குரல் பதிவின் மூலம்
தலைவரையும் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள் சிலரையும் படுமோசமாகவும் மற்றும் கேவலமாகவும்
விமர்சித்து குரல் பதிவுகளை வெளியிட்டுள்ளீர்கள்.
ஒழுங்காற்று நடவடிக்கை
இது விடயமாக கடந்த ஒன்பதாம் திகதி நடைபெற்ற தலைமைக் குழு கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டது.
அதனடிப்படையில் தலைமைக் குழுவின் தீர்மானத்தின் பிரகாரம்
தங்கள் மீது ஏன் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு இன்றில்
(15.11.2025) இருந்து இரண்டு வார காலத்துக்குள் தகுந்த விளக்கத்தை எழுத்து
மூலம் அறியத் தரவும்.
தலைமைக் குழுவின் பரிசீலனைக்குப் பின் உங்களது விளக்கத்துக்கான பதில்
அறியத்தரப்படும்.
அதுவரை
நீங்கள் கட்சியின் சகல உறுப்புரிமைகளில் இருந்தும் தற்காலிகமாக
இடைநிறுத்தப்படுகின்றீர்கள் என்பதை அறியத் தருகின்றேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த பாக்கியராசா
ஹான்ஸ்குமார், “எனக்கு லண்டனில் இருந்து சட்டத்தரணி ஒருவர் மேற்படி விடயம்
தொடர்பில் தமது தரப்புக்கு மானநஷ்டம் ஏற்பட்டுள்ளது.
காவல்துறையில் முறைப்பாடு
இதற்காக மானநஷ்ட
இழப்பீடாக 50 மில்லியன் ரூபா கோரி அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேலும்
நான் பணியாற்றும் இடத்துக்கு இனந்தெரியாத சிலர் சென்று விசாரித்துள்ளார்கள்.
இதனால் உரிமையாளர் பயத்தின் காரணமாக என்னை வேலையில் இருந்து நீக்கி விட்டார்.
இரவு வேளையில் நான் தங்கியிருக்கும் இடத்துக்கு மிக அருகாமையில் இனந்தெரியாத
சிலர் மோட்டார் சைக்கிள்களில் வந்து செல்கின்றனர்.
இதனால் நான் உயிர்
அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளேன், இது பற்றி நான் திருகோணமலை காவல்துறை
நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
