மீமூரே பகுதிக்கு மீண்டும் அணுகலை வழங்குவதற்காக, இலங்கையின் நக்கிள்ஸ்
பாதுகாப்பு வனப்பகுதியின் ஊடாகச் செல்லும் பழைய சரளைச் வீதியை மீண்டும்
திறக்கும் முன்மொழிவு, தொடர்பில் இலங்கையின் யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழு கவலை
வெளியிட்டுள்ளது.
இந்த வீதி, ஹோர்ட்டன் சமவெளிகள் மற்றும் சிவனொளிபாதமலையுடன்
இணைந்து யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட மத்திய உயர்நிலங்களின் உலகப் பாரம்பரிய
(World Heritage) அந்தஸ்துக்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கும் என்று தேசிய
ஆணைக்குழுவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் பிரபாத் ஜயசிங்க எச்சரித்துள்ளார்.
அவசரகால அணுகல் வழி
தெல்தெனிய – தங்கப்புவவிலிருந்து எட்டலவெட்டுவ வரை செல்லும் இந்த வீதி, சூழலியல்
ரீதியாக உணர்திறன் மிக்க நக்கிள்ஸ் காப்பகத்தை ஊடறுத்துச் செல்கிறது.
இந்த நிலையில் காப்பகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு கட்டுமானமும் அதன்
அசாதாரணமான உலகளாவிய மதிப்பை சிதைத்து, உலகப் பாரம்பரியப் பட்டியலிலிருந்து
இலங்கை நீக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச நன்கொடையாளர்களின் நம்பிக்கையையும், இராஜதந்திர நற்பெயரையும்
பேணுவதற்கு, சமீபத்திய அனர்த்தத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் உள்ளூர்
நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் உறுதிப்பாடுகளுடன் இணங்கிச் செல்ல வேண்டும்.
எனவே, பாதிக்கப்பட்ட சமூகங்களின் அவசரத் தேவைகளுக்கும் பாரம்பரியப்
பாதுகாப்புக்கும் இடையில் சமநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வீதி
திட்டத்துடன் முன்னேறுவதற்கு முன்னர் மாற்று அவசரகால அணுகல் வழிகளை வனப்
பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் யுனெஸ்கோ பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து
மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் ஆணைக்குழு கோரியுள்ளது.
