Home இலங்கை சமூகம் வடக்கு கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கும் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை

வடக்கு கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கும் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை

0

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களை சந்தித்துள்ள போதும் கடற்தொழிலாளர்கள் குறித்து யாரும் அக்கறை
கொள்ளவில்லை என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலாம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மன்னாருக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி கடற்தொழிலாளர்களின் நலனை கருத்தில்
கொண்டு அவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (11.12.2025) மதியம் இடம்பெற்ற ஊடக
சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

பாதிப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக கடற்தொழிலாளர்களும்
பாதிக்கப்பட்டதோடு, மன்னார் மாவட்டம் முழுமையாக
பாதிக்கப்பட்டது. நாளையதினம் மன்னார் மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள
நிலையில், மாவட்டத்தின் பாதிப்புக்களையும் ஆராயவுள்ளார். 

மன்னார் மாவட்டத்தில் தீவை எடுத்துக்கொண்டால் அதிகளவான கிராமங்கள் மீனவ
கிராமங்களாக காணப்படுகின்றன. தேவன்பிட்டி தொடக்கம் முள்ளிக்குளம் வரை
உள்ள கடற்தொழிலாளர்களும் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் கடற்தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இடம்பெற்ற
கலந்துரையாடல்களில் பேசப்படவில்லை என்ற முறைப்பாடுகள் கிராம மட்ட மீனவ
அமைப்புகள் ஊடாக சமாசத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக நேற்றைய தினம் கடற்தொழில் திணைக்கள உதவி
பணிப்பாளரை சந்தித்து குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி இருந்தோம்.

கடற்தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

அரசாங்க அதிபரை சந்திக்கும் போது முழுமையான விடயங்களை அரசாங்க அதிபரிடம்
தெரிவிப்பதாகவும், குறிப்பாக ஜனாதிபதியின் மன்னார் வருகையின் போது
மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடற்தொழிலாளர்கள் பாதிப்பை தான் வெளிக்கொண்டு வருவதாகவும்
பாதிப்புகளை முன்வைப்பதாகவும் கூறியிருந்தார்.

இதுவரை மன்னார் மாவட்டத்தில் கடற்தொழிலாளர்கள் சார்பாக 578 முறைப்பாடுகள்
கடற்றொழில் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடற்தொழிலாளர்களின் படகுகள், வலைகள் சேதமாகியமை உள்ளடங்களாக குறித்த முறைப்பாடுகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன.

578 நபர்களின் முறைப்பாடுகளை தவிர ஏனையவர்களின் பாதிப்புக்களும் பதிவு செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாக இருந்தாலும் பாதிக்கப்பட்டு பதியப்பட்ட அனைத்து
கடற்தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version