Home இலங்கை சமூகம் வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தவிர்க்கப்பட்டு வருவது ஏன்: சிறீதரன் கேள்வி

வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தவிர்க்கப்பட்டு வருவது ஏன்: சிறீதரன் கேள்வி

0

நாட்டில் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்துள்ள பின்னரும், வலிகாமம்
வடக்கு பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் வலிந்து தவிர்க்கப்பட்டு வருவது ஏன் என  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 நாடாளுமன்றத்தில் நேற்று(10) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை
27/ 2இன் கீழ் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“யாழ்.மாவட்டம், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும்
13 கிராம அலுவலர் பிரிவுகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மக்கள், பலாலி
இராணுவ முகாம் இராணுவத்தினரின் வருகை மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக
1990.06.15ஆம் திகதி தமது சொந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்தார்கள்.

குடியேறும் உரிமை

இந்த இடப்பெயர்வு நிகழ்ந்து 35 வருடங்கள் கடந்தும், நாட்டில் போர் முடிவடைந்து
16 வருடங்கள் நிரம்பிய பின்னரும் இன்றுவரை மீள்குடியேற்றப்படாத நிலையில் உள்ள
அந்த மக்கள், இந்த நாட்டுக்குள்ளேயே இடைத்தங்கல் முகாம்களிலும்,உறவினர்,
நண்பர்களின் வீடுகளிலும் சொல்லொணாத் துன்பங்களுக்கு மத்தியில் ஏதிலிகளாக
வாழ்ந்து வருகின்றார்கள்.

கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 700 ஏக்கருக்கும் அதிக விஸ்தீரணமுடைய காணிகளைக் கொண்ட
மயிலிட்டி, பலாலி, வசாவிளான்,கட்டுவன், குரும்பசிட்டி, குப்பிளான், தையிட்டி,
ஊறணி,தோலகட்டி உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த மக்கள், தமது சொந்தக் காணிகளில்
குடியேறும் உரிமை பறிக்கப்பட்டவர்களாகவே இன்றும் வாழ்கின்றார்கள்.

ஆட்சி
மாற்றங்கள், அரசு மாற்றங்களின் பின்னும் அவர்களது மீள்குடியேற்றம்
சாத்தியப்படுத்தப்படாமை பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரதும், அவர்களது
பிள்ளைகளினதும், அடுத்த தலைமுறையினதும் எதிர்காலத்தையே
கேள்விக்குட்படுத்தியிருக்கின்றது.

காணி அபகரிப்பு

எனவே, யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ்
உள்ள 13 கிராம அலுவலர் பிரிவுகளில் இருந்தும் கடந்த 36 வருடங்களுக்கு முன்னர்
இடம்பெயர்ந்து, இன்று வரை சொந்த மண்ணில் மீள்குடியேற முடியாது இந்த
நாட்டுக்குள்ளேயே ஏதிலிகளாக வாழ்ந்து வரும் குடும்பங்கள் எத்தனை என்பதை
அமைச்சர் அறிவாரா.

உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில், இந்த மக்களுக்குச் சொந்தமான எத்தனை
ஏக்கர் காணிகள் இன்றளவும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன
என்பதையும், குறித்த காணிகள் ஏன் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்பதையும்
அமைச்சர் இந்தச் சபைக்கு அறிவிப்பாரா.

இந்த நாட்டில் போர் முடிவுற்று 16 ஆண்டுகளின் பின்னரும் வலிகாமம் வடக்கு
பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் வலிந்து தவிர்க்கப்பட்டு வருவது ஏன்
என்பதையும், இதனால் சொந்த மண்ணில் குடியேறி வாழ முடியாதவர்களாக அந்த மக்கள்
படும் அவலங்கள் எத்தகையவை என்பதையும் அமைச்சரால் இந்தச் சபைக்கு அறிவிக்க
முடியுமா.

புதிய அரசாங்கம்

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தை அண்மித்துள்ள நிலையில்,
வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் சார்ந்து இதுவரை
மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் இந்தச் சபைக்கு
அறிவிப்பாரா.

இது விடயமாக, தங்கள் அமைச்சால் ஏதேனும் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டிருப்பின், வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் எப்போது
சாத்தியமாகும் என்பதை இந்தச் சபையில் பகிரங்கமாகத் தெரிவிக்க முடியுமா.

 அத்தகைய நடவடிக்கைகள் எவையேனும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனின் மேற்குறித்த
மீள்குடியேற்ற விடயம் காலதாமதமாவதற்கான காரணம் என்ன என்பதை அமைச்சர்
அறிவிப்பாரா என்று கேள்விகளை எழுப்பினார்.

NO COMMENTS

Exit mobile version