Home இலங்கை சமூகம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் இருந்து பதவி விலகிய அங்கத்தவர்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் இருந்து பதவி விலகிய அங்கத்தவர்

0

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கத்தவர் பதவியில் இருந்து ரேணுகா ஏக்கநாயக்க, விலகியுள்ளார்.

அவரது பதவி விலகல் கடிதம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ரேணுகா ஏக்கநாயக்க, கடந்த ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுஜவின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

முற்பணம்

அவர், ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலம் தொட்டு ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் அவரது உத்தியோகபூர்வ செயலாளராக இருந்த சமன் ஏக்கநாயக்கவின் மனைவியாவார்.

அத்துடன், கடந்த நல்லாட்சிக் காலத்தில் ரேணுகா ஏக்கநாயக்க கால்நடை வளங்கள் மற்றும் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

இந்நிலையில், குறித்த அமைச்சின் மூலமாக கடந்த 2018ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் இருந்து 15 ஆயிரம் கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்காக 11.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முற்பணமாக வழங்கப்பட்டிருந்தது.

எனினும், அதன் பின் கறவைப் பசுக்கள் இறக்குமதி செய்யப்படவில்லை.

விசாரணைகள் 

டென்மார்க் வங்கியொன்றில் இருந்து கடனாகப் பெற்றுக் கொண்ட தொகையொன்றில் இருந்தே குறித்த கறவைப் பசுக்களுக்கான இறக்குமதி முற்பணம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், அதன் பின்னர் இன்று வரை கறவைப் பசுக்கள் இறக்குமதி செய்யப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாமை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் அப்போதைய கால்நடை வளங்கள் மற்றும் கிராமியப் பொருளாதார அமைச்சின் செயலாளராக இருந்த ரேணுகா ஏக்கநாயக்கவும் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருந்தார்.

அவ்வாறான பின்புலத்தில் தற்போது அவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கத்தவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version