Home இலங்கை சமூகம் ஜனாதிபதி தேர்தல் தினமன்று சுகாதார சேவைகள் சீர்குலையும் அபாயம்

ஜனாதிபதி தேர்தல் தினமன்று சுகாதார சேவைகள் சீர்குலையும் அபாயம்

0

ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று சுகாதார சேவைகள் சீர்குலைவதைத் தடுப்பதற்கு சுகாதார அமைச்சும், பொது நிர்வாக அமைச்சும் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காததால், வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கான சிகிச்சைக்கு இடையூறு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கு மாத்திரமே தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் அவரவர் தொகுதிகளுக்குச் சென்று வாக்களிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்க சொந்த இடம் செல்லும் சுகாதார ஊழியர்கள்

அதன்படி, தேர்தல் தினத்தன்று அனைத்து சுகாதார ஊழியர்களும் வாக்களிக்க தங்கள் தொகுதிகளுக்குச் சென்றால், மருத்துவமனை செயற்பாடுகள் பாதிக்கப்படலாம் என்று சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ்(Ravi Kumudesh) தெரிவித்தார்.

இதன் காரணமாக பொதுமக்களின் சுகாதார உரிமைக்கும் சுகாதார ஊழியர்களின் வாக்களிக்கும் உரிமைக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடமையாற்றும் இடத்தில் வாக்குசாவடி 

எனவே, தங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வாக்குச் சாவடியையாவது அல்லது அவர்கள் கடமையாற்றும் இடத்திற்கேற்ப மாற்று இடமாவது வழங்கப்பட வேண்டுமென இச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும், பொது நிர்வாக அமைச்சுக்கும் கடிதம் அனுப்பப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version