பதுளை – ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்னலந்த பகுதியில் பாரிய பாறையொன்று சரிந்து விழுந்தமையினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் இன்று (20) காலை தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஹல்துமுல்ல பொலிஸ் பொறுப்பதிகாரி அசேல இந்துனில் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து அறிக்கை
இதன் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வந்து அந்த இடத்தை ஆய்வு செய்யும் வரை தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
மழை அதிகரித்தால், இந்த பாறைகள் மேலும், உருண்டு சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் எனவே, இந்த விடயத்தில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து அறிக்கை பெறப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பதுளையின் சில பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் வெளியாகியுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
