மோட்டார் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட 8 பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே அறிவித்துள்ளார்.
இலங்கை சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத சுமார் 400 சொகுசு கார்கள் போலியான முறையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அரசாங்கத்திற்கு 500 கோடி ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி
சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, இலங்கை சுங்கத்தால் அனுமதிக்கப்படாத சொகுசு மொண்டெரோ ஜீப்கள், லேண்ட் க்ரஷர் ரக கார்கள் உட்பட 400 கார்கள் மட்டுமே சுங்கத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
கடந்த காலங்களில் இலங்கை சுங்கத்தால் அனுமதி பெறாத வாகனங்களை போலியான முறையில் பதிவு செய்து, அரசாங்கத்திற்கு வரி வருமானம் கிடைக்காமல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பல முக்கிய உண்மைகள் வெளியாகியுள்ளன புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.