ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டாளரான மகிந்த பத்திரனவுக்கு எதிராக 1000 கோடி ரூபா நட்டஈடு கோரி, பிரதியமைச்சர் சுனில் வட்டகல வழக்குத் தொடுத்துள்ளார்.
தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு எதிராக கடுவலை மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் மகிந்த பத்திரன தனது பேஸ்புக் பக்கத்தில் கொழும்பு சினமன் லைஃப் சொகுசு குடியிருப்பு வளாகத்தில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார்.
நிதி ஆதாரம்
இந்தச் சொத்து வாங்குவதற்கான நிதி ஆதாரம் சந்தேகத்திற்குரியது என்றும், இது லஞ்சம் மூலம் பெறப்பட்ட பணமாக இருக்கலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
மகிந்த பத்திரனவின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என சுனில் வட்டகல நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் வாழ்க்கையையும் தனிப்பட்ட கௌரவத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் திட்டமிட்டே இந்தப் பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மகிந்த பத்திரனவுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அதற்கு அவர் எவ்வித பதிலும் வழங்கவில்லை என்றும் பிரதி அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
